பக்கம்:இன்ப வாழ்வு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இன்ப வாழ்வு


வசந்தவல்லியும் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் சிற்றின்பம் என்னும் கடலில், காதல் என்னும் கப்பலில் ஏறிப் பேரின்பம் என்னும் அந்தக் கரையை அடைந்ததாக அமைந்துள்ள இக்குறவஞ்சி நாடகம் சிறந்த பொருள் பொதிந்ததாகக் காணப்படுகின்றதல்லவா? வெல்லக் கட்டியையே விரும்பும் குழந்தைக்கு, அதனுள் மருந்தை மறைத்துவைத்துக் கொடுப்பதைப் போல, நாடகத்தையும் உலகச் சிற்றின்பத்தையும் விரும்பும் மக்களுக்கு, அவற்றுடன் பேரின்பக் கருத்தையும் கலந்து தருவதே இந்நாடகம் என்றால் மிகையாகாது.

இந்நூலாசிரியர் உலக நிகழ்ச்சிகள் பலவற்றை அமைத்து மிக எளிமையாகவும் இனிமையாகவும் பாமரரும் விரும்பும்படிப் பாடியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும். மேலும், பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களாகிய அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை முதலிய அகப்பொருள் நூல்களாகிய மலைகளின் உச்சியில் ஏறுவதற்குரிய படிகளுள் இக் குற்றாலக் குறவஞ்சியும் ஒன்று என்று கூறினால் அது குற்றமாகாது.

சுருங்கக் கூற வேண்டுமானால், ஒருவர் பாலை வனத்தின் நடுவில் நின்றுகொண்டு இக்குறவஞ்சி நாடகத்தைப் படிப்பாரேயானால், அது அவருக்குப் பாலைவனமாகத் தோன்றாமல் குளிர்ந்த சோலைவன மாகவே தோன்றும்.

அம்மம்மா! குற்றாலக் குறவஞ்சி நூலின் இன்பம் எத்துணை சுவை மிக்கது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/95&oldid=550826" இலிருந்து மீள்விக்கப்பட்டது