பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

சுந்தர சண்முகனார்


இதனை நன்னூலில் உள்ள

“அழலின் நீங்கான், அணுகான், அஞ்சி
நிழலின் நீங்கான், நிறைந்த நெஞ்சமொடு
எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்
அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே.”

என்னும் நூற்பாவால் உணரலாம்.

பாடம் கேட்கும் முறை

நன்னூலில் பாடம் கேட்க வேண்டிய முறை அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சில மாணவர்கள் நினைத்த நேரத்தில் பள்ளிக்கூடம் செல்வார்கள்; ஆசிரியர் கட்டளையில்லாமலேயே வாயில் வந்ததை உளறிக் கொட்டத் தொடங்கி விடுவார்கள், ஆசிரியர் கற்பிக்கும் பாடங்கள் அவர் தம் செவித்துளையில் சிறிதும் நுழையா. “எல்லாம் நுழைந்தன. இன்னும் வால் மட்டும்தான் நுழையவில்லை” என்று ஒருவர் கூறியதற்கிணங்க, மனம் வேறு எங்கெங்கேயோ சென்றிருக்கும், தப்பித் தவறிக் காதில் விழுந்த இரண்டொரு கருத்தையும் அங்கேயே மறந்து விடுவார்கள். ஆசிரியர் போகலாம் என விடையளிப்பதற்குள்ளாகவே எழுந்து ஓடி வந்து விடுவார்கள்.

இத்தகைய பிள்ளைகளும் உலகில் இருந்தே தீர்கின்றனர். இங்ஙனம் நடத்தலாகாது. குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்; சென்றதும் ஆசிரியர்க்கு வணக்கம் செலுத்த வேண்டும்; அவர் சொல்லிய பின் இருக்கையில் அமர வேண்டும்; அவர் கட்டளையிட்ட பிறகே ஏதேனும் ஒப்பிப்பதையோ, படிப்பதையோ செய்ய வேண்டும். வேறெங்கும் மனத்தைச் செலுத்தாது ஓவியம் போன்றிருந்து பாடங்களை ஏற்றுக் கேட்க வேண்டும். கோடைக் காலத்தில் உச்சிவேளையில் மிகுந்த தாகம்