பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

171


இன்றியமையாத இலக்கணச் செய்திகளாகும். நன்னூல் முழுவதும் கற்கப்பட வேண்டியது எனினும், இப்போது நடைமுறைக்கு இன்றியமையாது தேவைப்படுகிற இலக்கணச் செய்திகள் சிலவற்றை நன்னூலிலிருந்து எடுத்துக் கொள்வோமாக.

மொழிப் பயிற்சியின் வகை

கேள்விப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, படிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி எனமொழிப் பயிற்சி நால்வகைப்படும். முறை வைப்பும் இஃதே. கேட்டதைத்தான் பேசமுடியும். தமிழ்க் குழந்தைகள் குழவிப் பருவத்தில் ஆங்கிலம் கேட்க வில்லை - தமிழ்தான் கேட்கிறார்கள் - அதனால் அவர்களால் தமிழ்தான் பேசமுடிகிறது. தமிழ் கேட்காத ஆங்கிலக் குழந்தைகளால் தமிழ் பேச முடிவதில்லை - ஆங்கிலமே பேசுகின்றனர். எனவே, பேசுவதற்குக் கேள்விப் பயிற்சி (காதால் கேட்கும் பயிற்சி) இன்றியமையாதது. ஆகவே, சிறார்கள் நல்ல பேச்சுகளைக் கேட்க நிரம்ப வாய்ப்பளிக்க வேண்டும். திருத்தமாகப் பேசினால்தான் திருத்தமாகப் படிக்கவும் எழுதவும் முடியும். சொற்பொழிவாளர் ஒருவர், ‘உதாரணமாக வல்லுவரையே எடுத்துக் கொல்லுவோமே’ என்று பேசினார். உண்மையாக நடந்தது இது. வள்ளுவரையே எடுத்துக் கொள்ளுவோமே என்று பேசுவதற்குப் பதில் இவ்வாறு பேசியுள்ளார். சிலருக்கு, ‘வெல்லம் பல்லத்தில் பாய்வதும் உண்டு ல, ள, எழுத்துகளைத் திருத்தமாக ஒலிக்க இளமையிலிருந்தே பயிற்சி பெற்றிருந்தால், இந்த இழிநிலைக்கு இடம் ஏற்பட்டிராது. இன்னும் ஒன்று. தமிழர்களுள்ளேயே சில பகுதியினர் ‘ழ’ என்பதை ‘ள’ எனவே ஒலிக்கின்றனர். எனவே, ல - ள - ழ என்பவற்றையும், ர - ற என்பவற்றையும், ண - ந - ன என்பவற்றையும் எவ்வாறு ஒலிக்க வேண்டுமெனப் பயிற்சி அளிக்கவேண்டும்.