பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

193


போது, கடினமான அரிய சொல்லுக்கும் பொருள் விளங்கக் கூடும். இதற்குத் ‘தன் பொருளைத் தானே விளக்கும் தொடர்’ என்று பெயர் கூறுவர். தனிச் சொல்லுக்கு மதிப்பு இல்லாதது போலவே, தனி எழுத்துக்கும் மதிப்பு இல்லை. சொல்லில் வரும் போதே சொல்லாக வரும் போதே தனி எழுத்துக்கு மதிப்பு உண்டு.

ஒரு சொல் தொடர்

தனிச் சொல்லுக்கு மதிப்பு இல்லை எனினும், சில இடங்களில், ஒரு சொல்லே ஒரு தொடரின் பொருளைத் தருவதுண்டு. குழந்தை அம்மாவை நோக்கி 'அம்மா’ என்று ஒரே சொல் சொல்லி விளித்தால், அம்மா தண்ணீர் வேண்டும் - அம்மா பால் வேண்டும் - அம்மா காசு வேண்டும் - என ஒரு தொடரே அதில் அடங்கியிருப்பதாகப் பொருள் கொள்ளல் வேண்டும்.

இலக்கண இன்பம்

இலக்கணக் குறிப்பின் வாயிலாக இலக்கியத்தைச் சுவைக்கும் பயிற்சியும் வேண்டும். காட்டாக வினைத் தொகையை எடுத்துக் கொள்வோம். வினைத் தொகை என்பது பெயரெச்சத்தின் சுருக்கமேயாகும். வாழ்ந்த மனை - வாழ்கின்ற மனை - வாழும் மனை என்பனவும், முதிர்ந்த கனி - முதிர்கின்ற கனி - முதிரும் கனி என்பனவும், முறையே முக்காலம் காட்டும் பெயரெச்சங்களாகும். வாழ் மனை, முதிர் கனி என்பவற்றில் உள்ள வாழ், முதிர் என்பன வினைத் தொகைகள். இவற்றில் காலம் காட்டும் ‘த்’, ‘கின்று’ என்னும் இடை நிலைகளும், ‘உம்’ என்னும் விகுதியும் தொக்கு (மறைந்து) இருப்பதால், இவை வினைத் தொகை எனப்படும். அதாவது, வினைக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் காலம் மறைந்த பெயரெச்சம் வினைத் தொகையாகும்.