பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

213


தொள்ளாயிரம் என்பவற்றின் புணர்ச்சி விதிகளையும் நீக்கிவிடலாம்.

இவ்வாறாக, பொருந்தும் புணர்ச்சி விதிகளையும் இயற்கையாக வேண்டத் தகும் புணர்ச்சி விதிகளையும் கொள்ளலாம். பொருந்தாத - வேண்டாத புணர்ச்சி விதிகளைத் தள்ளலாம்.

1-9 பொருள் உள்ள புணர்ச்சிகள்

இதுகாறும் இரண்டு சொற்கள் புணரும்போது உண்டாகும் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகியமாறுதல்களைப் பார்த்தோம். இந்த மாறுபாடுகள் எந்தப் புதுப்பொருளையும் தரவில்லை. புதுப்பொருள்கள் தரும் மாறுதல்களும் உண்டு. அவற்றுள் சில காண்போம்:

1.9.1 நாலேகால்

நால் + கால் = நால் + உ + கால் = நாலுகால். நால் + ஏ + கால் = நாலே கால். இந்த இரண்டிற்கும் பொருள் காணுங்கால் வேறுபாடு உண்டு. நாலுகால் என்பது நான்கு கால்களைக் குறிக்கிறது. நால் என்பதின் ஈற்றில் உள்ள ‘உ’ என்பதைச் சார்த்துவரும் எழுத்து சாரியை - என்பர். இந்த ‘உ’ சாரியை, தமிழினும் தெலுங்கில் மிகுதி. இந்த ‘உ’ சாரியைக்குப் பொருள் இல்லை; மக்களின் ஒலி இறுதியில் இசைபோல் நீள்கிறது என்னும் ஒருசார் ஒலி இன்பத்தைத் தவிரவேறில்லை.

ஆனால், நால் + ஏ + கால் = நாலேகால் என்பதில், இடையில் உள்ள ‘ஏ’ என்பதற்குப் பொருள் உண்டு. நாலேகால் என்பதில், நான்கு காலுக்குக் குறைவும் இல்லை - மிகுதியும் இல்லை - நான்கே கால்கள் மட்டுமே என இந்த ‘ஏ’ தேற்றப்பொருளைத் (உறுதியைத்) தருகிறது. இதற்கு வேறொரு பொருளும் உண்டு.