பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சுந்தர சண்முகனார்


எண்ணிப் பார்ப்பதால், பழக்கத்தின் காரணமாக மனச் சான்றுக்கு மதிப்பு தந்து நல்லவன் என்னும் பெயர் பெறுகிறான் மனிதன். மனச்சான்றுக்கு அஞ்சுபவர் தவறுகள் செய்யார். காட்டாக ஒன்று கூற விழைகிறேன்! என் மகன் ஒருநாள் பள்ளிவிட்டு வீடு திரும்புகையில் வழியில் எட்டனா நாணயம் கண்டான். அதை எடுத்துக் கொள்ளாமல் என்னிடம் வந்து நாணயம் கண்டதைக் கூறினான். நான் ‘அதை ஏன் எடுக்கவில்லை’ என்றதற்கு, அப்பா! பிறருடையதை எடுக்கக் கூடாது! எடுத்தால் மிகவும் மனச் சான்றுக்கு மாறாக ஆகிவிடும் - என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே?” என்று என்னையே கேட்க ஆரம்பித்து விட்டான்.

இதிலிருந்து ‘மனச்சான்றுக்கு மாறாய் நடக்கக் கூடாது’ என்னும் கருத்து அவன் மனத்தில் பழக்கத்தின் காரணமாக ஆழமாகப்பதிகிறது; அதன்படிச் செயலாற்றவும் செய்கின்றது என்பது தெரிய வருகிறது. நீங்கள் உளநூல் கற்று வருகின்றீர்கள். உங்களுக்குத் தெரியும் எப்படிப்பட்ட மரபு நிலையையும் பழக்கம் மாற்றி விடுமென்று.

எப்போது உலகத்தில் போர் தொடங்கிற்றோ அப்போர் உலகில் இருவர் இருக்கும்வரை ஒழியாது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் மனிதனுக்கு இயற்கையாகவே போரூக்கம் இருக்கின்றது என்பதால். இடைவிடாத பழக்கம் இன்றியமையாதது. நாம் இளமையிலேயே பிள்ளைகளுக்கு ஐக்கிய நாட்டுத் தத்துவங்களை ஊட்டி ஊட்டி அவர்கள் மனத்தில் ஊறச் செய்ய வேண்டும். அவை அவர்கள் மனத்தில் பசு மரத்தாணிபோல் பதிந்துவிடும். எக்கொள்கையையும் நீண்ட காலம் பிள்ளைகள் மனத்தில் ஊறச் செய்தால் அவை மனத்தில் நன்றாக நாளடைவில் பதிந்துவிடும்.