பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11. மூன்று மடல்கள்

மடல்(கடிதம்) வடிவில் சில செய்திகளை அறிவுறுத்துவது ஒருவகை இலக்கியமாகும். இந்த முறையை அறிஞர்கள் பலர் கையாண்டுள்ளனர். எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்றாவது காண்போமே. சவகர்லால் நேரு அவர்கள் தம் மகள் இந்திரா அவர்கட்கு மடல் வடிவில் பல செய்திகளை அறியச் செய்த இலக்கியப் படைப்பு பலரும் அறிந்ததாகும். சிலர், அன்னைக்கு - தம்பிக்கு - தங்கைக்கு என்றெல்லாம் தலைப்பிட்டுத் தனித்தனி நூலே எழுதியிருப்பதையும் பலரும் அறிந்திருப்பர்.

இந்தக் கட்டுரையில், ஒருவர் தம் மைந்தனுக்கும், மாணாக்கனுக்கும், நண்பனுக்கும் எழுதியதாகத் தனித் தனி மடல்கள் மூன்று உள்ளன. இந்த முறை படிப்பவர்க்கு அலுப்பு தட்டாமல் ஆர்வம் ஊட்டும் ஒருவகை முயற்சியாகும். இனி முறையே மடல்களைக் காண்பாம்.

மடல் - 1

வரலாற்று அறிவு

அன்புள்ள மைந்த,

நலம். நலம் பல மலர்க!

நின் கடிதமும் நீ படிக்கும் ஊர்ப் பள்ளியில் தந்த தேர்வு மதிப்பெண் பட்டியலும் வந்தன. தேர்வு மதிப்பெண் பட்டியலில் கையொப்பம் இட்டு அனுப்பியுள்ளேன்.

நீ எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறாய். மகிழ்ச்சி. ஆனால் வரலாற்றுப் பாடத்தில் மட்டும் தேவைக்குக் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளாய். வரலாற்றுப் பாடத்தையும் கவனித்துப் படிக்க வேண்டும்.