பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

65


மாகவி சுப்பிரமணிய பாரதியார் தம் ஆத்திசூடி நூலில் ‘சரித்திரத்தில் தேர்ச்சி கொள்’ என்று எழுதியிருப்பதை நீ அறிந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். இல்லையேல், இப்பொழுதாயினும் அறிந்து, பாரதியாரின் அறிவு மொழியைச் செயலுக்குக் கொண்டு வருவாயாக.

தேர்வில் வெற்றி பெறுவதற்காக மட்டும் வரலாறு படிக்க வேண்டும் என்பதில்லை. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காகவும் வரலாறு படிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் வரலாற்றுப் பாடம் கற்பித்துத் தேர்வு நடத்துவதே, பிற்கால வாழ்க்கையைப் பயனுள்ள முறையில் அமைத்துக் கொள்வதற்காகத்தான்.

முதலில் வரலாறு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். Yesterday is History என்று ஆங்கிலத்தில் சொல்வது உண்டு. அதாவது, நேற்று வரலாறு என்பது இதன் பொருள்.

இவ்வாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உலகில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் பிற்கால வழிமுறையினர்க்குப் படிப்பினையாக இருக்கும்படி ஒரு மாதிரி வாழ்க்கையாகத் தெரியும்படி எழுதி வைக்கப்பட்டிருப்பதே வரலாறாகும்.

வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்களால் - வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் துணைப் பொருள்களால் - வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் கருவிகளால் வரலாற்றை மூன்று வகைப்படுத்துவது உண்டு. அவையாவன: பட்டப் பகலில் நடந்த வரலாறு - வைகறையில் மூடுபனியில் நடந்த வரலாறு - அமாவாசை நள்ளிரவு இருட்டில் நடந்த வரலாறு என்பன அவை. இம்மூன்றையும் விளக்க வேண்டுமா? சரி விளக்குகிறேன்.