பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

67


லாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், பாரதம், இராமாயணம் போன்றவை இத்தகையனவே. இலக்கிய இன்பத்திற்காக - இலக்கியச் சுவை நயத்திற்காகக் கற்பனை கலப்பது உண்டு. இவற்றுள் உள்ள கற்பனைச் செய்திகளைப் பகுத்தறிவின் வாயிலாக விட்டு விலக்கி, நடந்திருக்கக் கூடியதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இலக்கிய ஆசிரியனுக்கும் வரலாற்று ஆசிரியனுக்கும் உள்ள வேறுபாடாவது: கற்பனையும் கலந்து எழுதுபவன் இலக்கிய ஆசிரியன். கற்பனை சிறிதுமின்றி - தன் சொந்தக் கருத்தைச் சிறிதும் புகுத்தாமல், நடந்ததை நடந்தவாறு அப்படியே எழுதி அளிப்பவன் வரலாற்று ஆசிரியனானவன். வரலாற்று ஆசிரியன், கற்பனையையோ - தன் சொந்தக் கருத்தையோ இடையில் புகுத்துவானேயாகில், அவனது எழுத்து, வரலாறு என்ற பெயருக்கு உரியதாகாமல் இலக்கியம் என்னும் பெயர் பெறும் நிலையை அடைந்து விடும். எனவே, வரலாறு அதாவது சரித்திரம் என்பது, நடந்ததை நடந்தவாறு, காலம் - இடம் - நிகழ்த்தியவர் பற்றிய அறிமுகத்துடன் எழுதப்பட்டிருப்பதாகும்.

வரலாறுகள் எழுதப்பட்டிருப்பதன் நோக்கத்தை உணர்ந்து, அதனால் கிடைக்கக்கூடிய படிப்பினையின்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வரலாற்று அறிவினால், எது நல்லது - எது கெட்டது, எது அறம் - எது மறம் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும்; அறநெறியில் வாழ்ந்தவர்கள் அடைந்த ஆக்கத்தையும், மறநெறியைக் கடைப்பிடித்தவர்கட்குக் கிடைத்த பேரிழப்பையும் தெரிந்த கொள்ள முடியும். அதற்கு ஏற்ப நம் வாழ்க்கையைச் சீரிய - நேரிய முறையில் அமைத்துக்கொண்டு ஆக்கம் பெற இந்த வரலாற்றறிவு நமக்குப் பேருதவி புரியும்.