உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

111


சிற்பங்களும் அப்படியே உடன் விளைந்தவை என்பதாகச் சொன்னேன். இந்த உண்மையை ஒப்புக்கொள்ள முடிந்தது அவர்களுக்கு. நம்முடைய தமிழ்ப் பிரமுகர்களுக்குத்தான் முடியவில்லை. தமிழிலே ஒன்றும் இல்லை, கம்பனை எரி, திருவாசகத்தை எரி என்று பேச ஆரம்பிக்கிறார்கள். சாந்திநிகேதனுக்குப் போன தூது வெற்றிகரமாய் முடிந்தது.

கல்கத்தா தமிழர்கள் தமிழ் மோகம் பிடித்து அலைகிறார்கள் என்று சொல்லலாம். ஆடவர் பெண்டிர் எல்லாரும் ஒரே குழாமாய் தமிழைக் கேட்க வருகிறார்கள். கேட்டுப் பரவசமாகிறார்கள். நேரில் பார்த்தால்தான் உண்மை தெரியவரும்.

நேற்று இரவு 11 மணி முதல் 1 மணி வரை 500 ஆடவரும் 300 பெண்டிரும் கூடி இருந்து எங்களுக்கு விடை கொடுக்கும் விழா நடத்தினார்கள். பல பேர் மிக்க செல்வாக்கு உடையவர்கள் முதல் தரமான பத்திரிகை ஆசிரியர்கள் வியாபாரிகள், ஐபிஎஸ் ஆபிசர்கள், விஷயம் தெரிகிறதல்லவா. இவர்கள் எல்லாரும் விமானக்கூடம் வந்து வழியனுப்பினார்கள்.

சென்னையில்தான் சிலநாள் இருக்க வேண்டும். கொஞ்சம் வைத்தியம் நடத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறார்கள். பிறகுதான் குற்றாலம்.

பாளையங்கோட்டையில் ராஜேஸ்வரி முதலானோர்கள் செளக்கியந்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖