உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ரசிகமணி டிகேசி


தாங்களும் உடனிருந்தால் தானே பிரயோசனம். அதனால் உடனேயே அச்சுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டேன். அச்சிட்டு விநியோகம் செய்தால் விசேஷ வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாரும் வாசிப்பார்கள் அனுபவிப்பார்கள். விசேஷத்துக்கு புத்தகம் ஒரு சோபையைத்தரும்.

சா. கணேசன் இங்கே ஒரு பகல் தங்கினார்கள். நாட்டரசன்கோட்டையில் நடந்த விருத்தாந்தங்களைப் பற்றி தங்களை ஒட்டியே பேசினார்கள். அவர்களுக்கும் விஷயங்கள் தெரிந்திருக்கிறது. நானும் சா.க.வுக்கு எழுதியிருந்தேன். வையாபுரிப்பிள்ளை அவர்களுடைய பாடங்கள் கண்டுள்ள ராமாயணத்தை அச்சிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தையே வை. பிள்ளையவர்களுக்கு அனுப்பிவிட்டார்களாம். இதனால் தெரியலாம் அவர்களுக்கு நாம் எவ்வளவு ஒத்தாசை செய்யத் தயாராய் இருக்கிறோம் என்று. அவர்களுக்குப் படையாய் வந்த ஆசாமிகள் சா.கவுக்கு நம்மைப்போல எழுதுவார்களா என்றுதான் கேட்கிறேன்.

இப்போது ரொம்ப சுறுசுறுப்பான ஆசாமியாகிவிட்டேன். நானாக அல்ல. கல்கியும் அருணாசலம்பிள்ளையும் என்னைத் தெழிஉழவுதான் வாங்குகிறார்கள். நான் இப்போது ஈசிச்சேர் ஆசாமி அல்ல. காலை முதல் இரவு 11 மணி வரையும் ஏதாவது கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பிரசங்கங்களும் பெருகுகின்றன. படலம்பாடவேண்டியதுதான் சோம்பேறி சுறுசுறுப்பானது என்று.

கல்கியில் வரும் ராமாயணக் கட்டுரைகளை வாசித்துவிட்டு லேசாய் இருக்கிறது என்று பலர் சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனாலும் பாட்டுகள் இல்லாமலிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று சொல்லவும் சிலர் முன் வருவார்கள். கன்றுக்குட்டி ஓட்டமாய் ஓடும். ஆற்றில் தண்ணீரைக் கண்டவுடன் பக்கென்று நின்று விடும். திரும்பியே போய்விடும். கல்கி நேயர்களும் அனேகமாக அப்படித்தானே.