பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

71
திருக்குற்றாலம்
12.12.44

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் 5.11.44 அன்று அனுப்பிய அழகான கட்டுரை கிடைத்தது. அதைக் கடிதம் என்று சொல்லக்கூடாது. கட்டுரை என்றுதான் சொல்லவேண்டும்.

பெரிய உண்மையை அல்லவா அதில் எழுதியிருக்கிறீர்கள். இங்குள்ள நண்பர்களோடு பல தடவை வாசித்து அனுபவித்தேன்.

தாங்கள் தலைவரைக் குற்றம் சொல்ல வேண்டியதில்லை. அவர் பேசிய விஷயங்களை இவர்களிடமிருந்துதானே கைமாற்றாக வாங்கியிருக்கிறார்.

சிலப்பதிகாரத்தின் பாஷை, நமக்கே கஷ்டம். இதில் தமிழ்ப் பயிற்சி இல்லாதவர் ஒருவர் அறிந்துவிட்டார் என்றால் பரிதவிக்க வேண்டிய காரியந்தான். நோய் அஸ்தியிலேயே தாக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

தலைவரும் ஸ்காலர்களும் வேறு பிறவி ஒன்று எடுத்தால் அல்லவா கம்பரது தெய்விக தத்துவம் தெரியும். மக்களால் செய்யவே முடியாத ஒரு காரியத்தை ஒருவர் செய்தால் அவரது செயலைத் தெய்வீகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆங்கிலப் படிப்பு நம்மவர்களை என்னவெல்லாமோ செய்துவிட்டது. ‘பா’வம் ஒன்றிருக்கிறது உருவம் ஒன்றிருக்கிறது என்ற காரியமே தெரியாமல் போய்விட்டது. ஆங்கிலத்தில எழுவாய் பயனிலையைக் கண்டுபிடிப்பதிலும், பொழிப்புரையைப் பார்த்தும் எழுதியும் அதை வியந்து கொண்டிருப்பதிலுமே காலம் போய்விட்டது.