உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

75


இந்த தடவை ராஜேஸ்வரியை மீட்டிங்கிலும் கச்சேரியிலும் பார்த்துக்கொள்ள முடிந்தது. அளவளாவ செளகரியம் இல்லாமல் போய்விட்டது. 24 ஆம் தேதி மாலை நண்பர் கோபாலபிள்ளையுடன் அரிய விஷயங்கள் பேச நேர்ந்தது. தமிழ்ப் பாடல்களை வெகு நுட்பமான முறையில் அனுபவித்தார். தாங்கள் ராஜேஸ்வரி இருவரும் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். நம்முடைய தமிழ் இலக்கிய அனுபவத்துக்கு தனியான ஒளி கொடுத்த மாதிரி இருந்தது. தமிழ்க் கவியின் நுட்பத்தை அனுபவிப்பதற்கு ஒரு மலையாளிக்கு தமிழ்நாட்டில் பத்து வருஷம் இருந்தால் போதும் என்பது அன்று நான் கண்ட உண்மை. ஆனால் தாங்கள் கேட்கலாம் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ் இலக்கியங்களோடு கட்டியழுதும் ஏன் பிரயோசனம் இல்லாமல் போகிறது சிலருக்கு என்று. அதற்குக் காரணம் ஒரு சாபம், வேறொன்றும் இல்லை.

25 ஆம் தேதி தமிழ் ஆசிரியர் அந்தோணி (புனித சேவியர் கல்லூரி பண்டிட்) பார்க்க வந்தார். ஒரு மணி நேரம் அளவளாவ நேர்ந்தது. அதிலிருந்து தமிழிடத்தில் அபார மதிப்பு ஏற்பட்டது. அதோடு நிற்கவில்லை என்னிடத்திலுமே ஏற்பட்டுவிட்டது. எப்படி இருக்கிறது காரியம்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖