ஊடலும் ஆடலும் 47 இறைவியின் ஊடல் நீங்கும் அறிகுறி தோன்றியது: அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. சாம வேதம் பாடின தாளத்தோடே கூத்தாடினான். ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம்; பாடிய பாணி யாலே ஆடினார். [பாணி-தாளம்.] உமாதேவியாகிய பராசக்தி இறைவனோடு ஒன்றியும் இருப்பாள்; வேறு பிரிந்தும் நிற்பாள். சக்தி இறைவனது அருளின் உருவம். அப் பெருமாட்டி ஊடல் கொண்டால் இறைவனுக்கு இன்பம் இல்லை என்பது ஒரு குறிப்பு. இறைவனிடம் அருள் ஒன்றாவிட்டால் உலகுக்கே இன்பம் இல்லை. அருள் வழி நின்று உலகம் இயங்குகிறது. அந்த அருளாணை ஊடுதலாவது, வெளிப்படாமல் நிற்பது. சக்தி ஊடுதலின்றி இறைவனோடு கூடினால் உலகுக்கு இன்பம் உண்டாகும். இறைவன் அந்த அருளை மேற்கொண்டான் என்பதனையே உமாதேவியின் ஊடலை நீக்கினான் என்று கதையாகக் கொள்வார்கள். இறைவன் பாடியும் ஆடியும் உமாதேவியின் ஊடலை நீக்கிவிட்டான். அந்த இறைவன் யார் தெரியுமா? "கெடில நதியினால் வரம்பு கட்டப்பெற்ற எங்கள் திருவதிகை வீரட்டத்தில் உள்ள பெருமான்" என்கிறார் அப்பர். இறைவன் அருள் வெளிப்பட்டு அவனை இவ் வளவும் இறங்கிவரச் செய்தது. இல்லையானால் அவன் குணங் குறி கடந்த நிலையில் இருப்பான். இங்கே வரமாட்டான். உமாதேவி ஊடல் நீங்காமல் இருந்தால் அவன் வெளியே எங்கே வரப்போகிறான்? அவள் ஊடல் நீங்கினாள்; நாம் சிவபிரானைத் திருவதிகையிலும் திருத் தில்லையிலும் மற்ற இடங்களிலும் காண்கிறோம்; ஆடுகிறோம்: பாடுகிறோம்.
பக்கம்:இரவும் பகலும்.pdf/56
Appearance