பக்கம்:இரவு வரவில்லை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. இதுவல்ல வேளை!


உண்ணுதற்குப் பொருள்தேடிச் சென்றாரோ? இல்லை!
உனைமணைக்கப் பொருள்தேடிச் சென்றாரோ? இல்லை!
பெண்ணரசி! என்தலைவி! உன்றமிழை, நாட்டைப்
பிறர்க்கடிமை ஆக்கவரும் இந்தியினை வெட்டி
மண்ணோடு மண்ணாக்கப் புறப்பட்டுப் போனார்;
வந்திடுவார் கலங்காதே வாகைமலர் சூடி!
பெண்ணெல்லாம் கோழைகளோ? உயிரன்றோ நாடு?
பிரிவெண்ணி வாடாதே! இதுவல்ல வேளை!
1


அன்றொருநாள் உனைத்தேடி நள்ளிரவில் வந்தார்;
அடர்கிளையிற் புள்ளெழுப்பி உன்வரவுக் காக
நின்றிருந்தார் தோட்டத்தில்! உனைக்கொண்டுவிட்டேன்!
நிலைதெரியாக் குடியரைப்போற் கூத்தடித்தீர்! கண்டேன்!
இன்றுன்னை மறப்பாரோ? போடி, போ, பேதாய்!
இன்றமிழை உன்நாட்டைக் குலைக்கவரும் இந்திப்
புன்மொழியைப் புறங்கண்டு வந்துன்னைச் சேர்வார்!
பிரிவெண்ணிக் கலங்காதே! இதுவல்ல வேளை,
2


தைபிறந்து விட்டதடி! ஊரெல்லாம் இன்றோ
தடபுடலே! என்சொல்வேன்! பொங்கலடி பொங்கல்!
மைவிழிகள் நீர்சிந்த மாலைவரச் சோங்கும்
தாமரையைப் போலுனது வாட்டமுகம் கண்டேன்!
நெய்விளக்குச் சுடர்போலத் தமிழர்திரு நாளில்
நிலைகுலைந்தாள் என்தலைவி! கோழைகளா பெண்கள்?
உய்வதற்கு நாமெல்லாம் தமிழுய்ய வேண்டும்!

உயிர்த்தலைவர் பிரிவெண்ண இதுவல்ல வேளை!
3

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/49&oldid=1180090" இலிருந்து மீள்விக்கப்பட்டது