பக்கம்:இரவு வரவில்லை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. குடியாட்சி


‘என்றென்றும் தானரசன் விளைவுதன’ தென்றே
ஏப்பமிட்ட முடிமன்னர் முறைகெட்ட ஆட்சி
கொன்றொழித்துக் குடிமக்கள் தாம்தம்மை ஆளக்
கொண்டபெரும் அறச்செயலே குடியாட்சி! வாழ்க!
குன்றொத்த போர்மறவர் உழைப்பாளர் செல்வர்
குலமகளிர் நல்லறிஞர் கூன்குருடு யார்க்கும்
நன்றிதுவே! தாயகத்தில் வாழுகின்ற மக்கள்
நல்விருப்பப் பெருவாழ்வே நாட்டையர சாளும்!
1


வாழுகின்ற மக்களெலாம் சாதிமத மற்ற
மணிவயிற்றுத் தாயொருத்தி மக்களைப்போல் வாழ்வர்;
சூழுகின்ற இன்பதுன்பம் யாவருக்கும் ஒன்றாம்;
தொகுத்துள்ள சட்டங்கள் பொதுவாகும்; நாட்டின்
தாழ்வெதிர்த்தே இடித்துரைக்கும் சான்றாண்மை ஒவ்வோர்
தனிமனிதன் பிறப்புரிமை; பெயரளவி லின்றி
வாழ்வளிக்கும் நல்லமைச்சர் அரசாளும் நாடே
மாப்புகழ்சேர் குடியாட்சி வாழுகின்ற நாடாம்!
2


‘அழியாத பெரும்புகழால் தான்பிறந்த நாட்டை
அயல்நாட்டைப் போலுயர்த்த வில்லை’ என்றே ஏசும்
பழிக்கஞ்சும் நல்லமைச்சைத் தேர்ந்தெடுக்கும் மேன்மை
படிப்பில்லா மக்களினால் ஒருபோது மாகா!
அழிவில்லாக் கட்டாயக் கல்வியினை மக்கட்(கு)
அளிப்பதுவும், போர்ப்பயிற்சி அளிப்பதுவும் நாட்டின்
விழியாகும்! தாய்மொழியில் தாய்நாட்டுப் பண்பில்
விழிப்பில்லா அமைச்சாளிப் பாழாகும் நாடே!
3


71
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/77&oldid=1179771" இலிருந்து மீள்விக்கப்பட்டது