பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூமியின் துணைக்கோள்கள்

91


அமெரிக்காவும் இரஷ்யாவும் அனுப்பிய துணைக் கோள்கள் பருமனிலும் நோக்கத்திலும் பெரிதும் வேறுபட்டவை. வான்கார்டு-I மிக மிகச் சிறிய ஒரு கோளம். அதன் குறுக்களவு 6½ அங்குலம்; எடையும் 4 இராத்தலுக்குக் குறைவாகவே இருந்தது. ஆனால், அஃது ஒரு விளையாடும் பொம்மையன்று. மிக்க அறிவு நுட்பம் வாய்ந்த பொறியியல் துணையால் 6½ அவுன்ஸ் எடையுள்ள மிகச் சிறிய வானொலியின் அனுப்பும் கருவியும், சூரியனின் கதிர் வீச்சினை அளக்கக்கூடிய 2½ அவுன்ஸ் எடையுள்ள பொறி அமைப்பும் (device), வேறு பல நுண்ணிய கருவியமைப்புக்களும் அதனுள் அமைக்கப்பெற்றன. அந்தத் துணைக் கோளின் ஒரு பகுதியில் ஞாயிற்று மின்கலங்களின் (Solar batteries) வரிசைகள் அமைந்திருந்தன. இவை சூரியனின் ஒளியை உறிஞ்சி அதன் உதவியால் சாதாரண மின்கலங்களைத் திரும்பவும் மின்னூட்டம் பெறச் செய்தன. இதனால் வான்கார்டு-I தொடர்ந்து பூமிக்கு வானொலி எடுகோள்களை (Radio data) அனுப்பிக்கொண்டே இருக்க முடிகின்றது.

ஸ்புட்னிக் II³ ஐப்பற்றி அதிக விளம்பரம் இருந்தது. ஏனெனில், அது தன்னுள் லைக்கா (Laika) என்ற நாயை ஏற்றிக்கொண்டு சென்றது. வான்வெளியில் பிராணிகள் சாகாமல் பிழைத்து வாழுமா என்ப்தைக் கண்டறிவதே. இதன் நோக்கம். லைக்கா ஒரு சிறிய பாதுகாப்பான அறையிலிருந்து கொண்டு (Pressurized cabin) மணிக்கு , 18,000 மைல் வேகத்தில் செல்லுங்கால் அதன் இதயத் துடிப்புக்கள், உடலின் வெப்ப நிலை, பிற நிலைகள் யாவும் அது பாதிக்கப்பெறாத நிலைமையையே காட்டின. ஆயினும், அந்தச் சமயம் இரஷ்யர்கள் அச்சிறு பிராணி திரும்பவும்


3. இது 1957இல் நவம்பர் 3ஆம் நாள் அனுப்பப்பெற்றது. திரும்பியது 14-4-58 இல்.