பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

இராக்கெட்டுகள்


காற்று மண்டலத்திற்கு வருவதற்குரிய ஒரு நுட்ப முறையைக் கண்டறியாததால், எட்டு நாட்கள் கழித்து வலியற்ற முறையில் அப் பிராணி இறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இக்காரணத்தால் அப் பிராணி பின்னர்க் கதிர் வீச்சின் விளைவுகளால் மரித்ததா என்று சொல்லுவதற்கு வேறு வழியே இல்லை. அது சிறிது காலம் பிழைத்திருந்தது போல் பிழைத்திருந்திருக்கலாம் என்ற நம்பிக்கையும் பின்னர் அமெரிக்கா அனுப்பிய டார்ப்பிடோ-வடிவ எக்ஸ்புளோரர்-1[1] என்ற துணைக்கோள் ஒரு சில நூறு மைல்களுக்கு அப்பால் வளிமண்டலத்தில் திண்ணிய கதிர் வீச்சு அடுக்கு அமைந்துள்ளது என்று காட்டிய மெய்ம்மையால் இல்லா தொழிந்தது. இந்த அடுக்கு ஒரு சில ஆயிரம் மைல்கள் பரவியுள்ளது என்றும், 600 மைலுக்குமேல் இது மிகத் திண்மையாக உள்ளது என்றும் இன்று நம்பப்பெறுகின்றது. 600 மைல் உயரத்தில் 2 மணி நேரத்தில் ஒரு மனிதன் தாங்கக்கூடிய உச்ச அளவு கதிர் வீச்சினைத் தரும் என்றும், இதற்கு மேலுள்ள உயரங்களில் கதிர் வீச்சின் திண்மை அதிகரிக்கின்றது என்றும், தக்க பாதுகாப்பின்றி இதனூடே செல்லும் எந்த உயிர்ப் பிராணியும் மரித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

விளங்காப் புதிராகவுள்ள ‘வான் அல்லென் கதிர் வீச்சு வளைசூழல்’ (Van Allen Radiation Belt) என்ற மண்டலம். தான் முதலில் அனுப்பப்பெற்ற துணைக்கோள்கள் காட்டிய தகவல்களுள் மிக முக்கியமானது. இன்னும் ஆராய்ச்சிகளால் எல்லையற்ற வானவெளியைப்பற்றிய இரகசியமாகவுள்ள பல வியப்புக்குரிய செய்திகளை எதிர் காலத்தில் நாம் பெறப் போகின்றோம்.


  1. 1958-ஜனவரி 31 இல் அனுப்பப்பெற்றது.