பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைத் துறைகள்

105

தொழில் துறைகளிலிருந்தும் பதினைந்து இலட்சத்திற்கு மேற்பட்ட கருவிகளின் உறுப்புக்களைத் தயார் செய்யும் ஆண்களும் பெண்களும் தேவை. இந்த உறுப்புக்கள் ஏதாவதோர் ஆயுத அமைப்பில் இடம் பெறுகின்றன.

பிறவாழ்க்கைத் துறைகளைப் போலவே, இங்கும் சிறந்த தகுதிகளைப் பெற்றிருப்போருக்கு எதிர்கால வாய்ப்புக்கள் காத்துக் கொண்டுள்ளன. பெரும்பாலான தொழில்களுக்குப் பல்கலைக்கழகப் பட்டம் இன்றியமையாததாக உள்ளது. ஆனால், பல்கலைக்கழகப் பயிற்சியின்றியே விரைந்து செயற்படும் மூளையையும் சரி நுட்பத்திறனுடன் பணியாற்றும் இயல்பும் பெற்றுள்ள ஓர் இளைஞன் மின்னியல் முறையில் செயற்படும் கணக்கிடும் பொறிகளை இயக்கவும், குடையும் கருவியமைப்பினைச் சுழற்றவும், தொலை ஒலிப்பான் (Telemetering) ஏற்குங் கருவிகளைக் கையாளவும் கற்றுக் கொள்ளலாம். இவை யாவும் இராக்கெட்டு வளர்ச்சியில் பெரும்பங்கு பெறுகின்றன.

தொழில் நுட்பத்திறனோ அதுபற்றிய அறிவோ இல்லாதவர்கட்குக் கூட இத்துறையில் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. இராக்கெட்டுகள், ஏவுகணைகள் இவற்றைச் செலுத்தும் துறையில் எண்ணிறந்தோர் தேவைப்படுகின்றனர். விமானப் படையினர், தரைப் படையினர், கப்பற் படையினர் இவர்கள் யாவரும் ஏவுகணைகளை இயக்குவதில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில், இந்த ஏவுகணைகள் இன்று துப்பாக்கிகள், டார்ப்பிடோக்கள், விமானிகளுடன் கூடிய ஒரு சில வகை வான ஊர்திகள் இவற்றின் இடங்களைப் பெற்றுவிட்டன. நல்ல பயிற்சி பெற்றுவிட்டால் அவர்கட்காக எண்ணற்ற அலுவல்கள் (Jobs) காத்துக்கொண்டுள்ளன.