பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராக்கெட்டின் கதை

17


திட்டமிடப்பெற்றிருந்தன. இந்நிலையில் போர் முடிவு பெற்றது. செருமெனி 1945 இல் இரண்டாவது உலகப் பெரும்போரில் தோல்வியுற்றதும் னேமுண்டே (Peenemunde) இராக்கெட்டுச் சோதனைகளும் முடிவுக்கு வந்தன. இவ் ஆராய்ச்சிகளைக் கண்டு பிறநாடுகள் வியப்பு எய்தின. இங்கு ஆய்வுகளில் பங்குபெற்ற அறிவியலறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும் நாலா திசைகளிலும் பிரிந்து சென்றனர். சிலர் இரஷ்யாவிற்கும், சிலர் ஃபிரான்ஸிற்கும், மற்றும் சிலர் இங்கிலாந்திற்கும் சென்றனர். முக்கிய மானவர்களில் சிலர் அமெரிக்காவை அடைந்தனர்.

இதன்பிறகு இராக்கெட்டு ஆராய்ச்சிக்கு அமெரிக்கா நிலைக்களமாக அமைந்தது. இரஷ்யர்களும் இத்துறையில் தீவிரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளும் இத்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுள் அமெரிக்காவில் மெக்ஸிகோ பாலைவனத்தில் வெள்ளை மணல் வெளியில் (White Sands) நடைபெறும் ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கது. வாழ்வதற்குப் பயனற்ற இப்பகுதி 125 மைல் நீளமும் 41 மைல் அகலமும் உள்ளது. இந்த இடத்தில் நல்ல பருவ நிலையும் அமைந்துள்ளது. இங்கிருந்து இராக்கெட்டு செல்லுவதைச் சுமார் 100 மைல் எல்லைவரை நன்கு காணுதல் கூடும். இந்நிலப் பகுதி முழுவதிலும் உற்று நோக்கிப் பரிசீலிக்கும் நிலையங்களும், தொலை ஒலிப்பான் (Tele matering), இராடார் (Radar) இவற்றின் பொறியமைப்புக்களும் பிறவும் உள்ளன. இந்த இடத்திலிருந்துகொண்டு இராக்கெட்டுகள் செல்வதைக் கவனிப்பதுடன் பல வகையான தகவல்களை வானொலி மூலம் சேகரிக்கவும் இங்கு வசதிகள் உள்ளன.

இ.-2