பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல் முகம்

இவற்றைப் பயிலும் மாணாக்கர்களிடமும் பிறரிடமும் அறிவியல் பசியைத் தூண்டக் கூடுமானல் அதுவே யான்பெறும் பேறு எனக் கருதுவேன்; மகிழ்வேன்.

இலக்கியத் துறையிலும் சமயத் துறையிலும் பல்லாண்டுகளாகப் பணியாற்றிப் பெரும் புகழ்பெற்ற சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இந்த அறிவியல் நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்டமைக்குக் கழகத்தினருக்கும், சிறப்பாகக் கழகத்தின் உயிர் நாடியாக இயங்கும் இளமைத் துடிப்பு மிக்க கழக ஆட்சியர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கட்கும், என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது.

இந்நூலை வெளியிட இசைவுதந்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தினருக்கு-சிறப்பாக அப் பல்கலைக் கழகத்தை நன்முறையில் இயக்கிவரும் அதன் துணைவேந்தர் டாக்டர் V. C. வாமனராவ் அவர்கட்கு- என் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அறிவாலும் ஆற்றலாலும் உயர்ந்த சீலத்தாலும் அத்தனைக்கும் மேலாகச் செயலாற்றும் திறனுலும் என் உள்ளத்தைக் கவர்ந்தவர்கள்-தமிழ் கூறு நல்லுலகத்தின் தந்தை போன்றவர்கள்-தவத்திரு. குன்றக்குடி அடிகளார். அடிகளார் சின்னப்பட் மாக இருந்த காலத்திலேயே வேண்டாத சில மடத்துச் சம்பிர தாயங்களைக் கைவிட்டதனால் பொதுமக்கள் உள்ளத்கைக் கவர்ந்தவர்கள். எவருடனும் இன்முகத்துடன் பழகும் பண்புடையவர்கள்; ’பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என்ற வாய் மொழிக்கு எடுத்துக்காட்டாக நின்று நிலவுபவர்கள். பட்டம் ஏற்று மடத்துப் பொறுப்புக்கள் யாவும் அவர்களை வந்தடைந்த பிறகு பலதுறைகளிலும் அவர்களது அருள் நோக்கம் சென்றது. அறங்கள்யாவினும் "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்” என்பதை உணர்ந்து பல பள்ளிகளையும் இலவச உணவு விடுதிகளையும் நிறுவினார்கள். “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி, பேணி வளர்த்திடும் ஈசன்” என்பதையுணர்ந்த அடிகள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி, “பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம், பேதைமையற்றிடும்