உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகத்தில் கோபக் குறியாவது, அதிருப்திக் குறியாவது காணப்படவில்லை. எல்லாரும் அதிக சந்தோஷத்துடனே உண்டனர்.

விருந்து முடிந்தது. இராபர்ட்டு அரசரும், அவர் மெய்காப்பாளரும் எழுந்தனர். பின்பு, அவர்கள் அங்குக் கூடியிருந்தவர்களிடம் விடை பெற்று நடந்து சென்றார்கள். அவர்கள் கழற்றி வைத்த விலையுயர்ந்த மேலாடைகள் அவர்கள் சாப்பிட்ட இடத்திலேயே இருந்தன. அவர்கள் அவற்றை எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் வந்தது முதல் சென்றது வரையில் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த கிரேக்க அரசன். மிகவும் ஆச்சரியப்பட்டான். பின்பு அவன், தன் ஆட்களுள் ஒருவனை இராபாட்டுப் பிரபுவிடம் அனுப்பி, கீழே வைத்து விட்ட உடைகளை அணிந்து கொள்ளச் சொன்னான். இராபர்ட் பிரபு அச்சேவகனை நோக்கி, ‘நார்மன் வமிசத்தார் தாம் உட்காருவதற்கு உபயோகப்படுத்திய எப்பொருளையும் எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்று உன் அரசனிடம் கூறு,’ என்று கூறி விட்டுச் சென்றார்.

சேவகன் கிரேக்க அரசனிடம் வந்து, இராபர்ட்டுப் பிரபு கூறியதைச் சொன்னான். அது கேட்டு அரசன் வெட்கம் அடைந்தான்; சாந்த குணமும், அடக்கமும் வாய்ந்த புண்ணிய சீலரான இராபர்ட்டுப் பிரபுவை வரவேற்று, உபசரிக்காததற்காகத் தன்னையே வெறுத்துக் கொண்டான்.

38