பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 38 இராமன் - பன்முக நோக்கில் சற்று வினோதமானதே. இந்த இரண்டு இடங்களும் பாத்திரப் படைப்புக்குச் சிறப்பு செய்யாமையால் கம்பன் இக்கதையைப் பிராட்டி தானே நினைந்து வருந்துவதாகப் பாடிவிட்டான். பெரியாழ்வார் பாடலில் உள்ள பல அடையாளங்களையும் ஏனோ கம்பன் பாடாது விட்டுவிட்டான். வான்மீகத்திலும் காணப்படாத ஒர் அடையாளம் பெரியாழ்வார் பாடலில் இடம்பெற்றுள்ளது. இராமனும் சீதையும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இராமன் தோற்றுப்போகவே அவனை மலர் மாலையால் சேர்த்துக் கட்டிவிட்டாள் என்று வரும் பெரியாழ்வார் பாடல் நிகழ்ச்சி வேறு எங்கும் காணப்படவில்லை. வான்மீகத்தில் காணப்படாத இராமன் பற்றிய பல கதைகள் தமிழகத்தில் நெடுங்காலமாக வழங்கி வந்தன என்பதற்குப் பெரியாழ்வார் பாடல்கள் ஆதாரமாகும். நெருப்புச் சொல் இனி, போர் முடிந்து, வீடணன் இராவணனுக்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் முதலியவற்றை நிகழ்த்திய பிறகு அவனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அது முடிந்தபின் இராகவன் வீடணனை அழைத்து, 'நம் தேவியைச் சீரொடும் தருக" என்று கூறவும் அவன் சீதையை அலங்கரித்து அழைத்து வருகிறான். வந்து வணங்கி நின்ற பிராட்டியைக் கண்டு சீறி எழுகிறான் இராகவன். அவன் பேசிய பேச்சுக்கள் படிப்பவர் மனத்திலேயே பெரு வருத்தத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குகின்றது என்றால், அதனை நேரிடையாகப் பெற்ற பிராட்டியின் மனநிலையைச் சொல்லவும் வேண்டுமோ? இங்கே இராமன் பேசும் பேச்சுக்கள் சாதாரண மனிதனுக்குக்கூட அழகு சேர்க்கமாட்டா என்றால், மாமனிதனாகிய இராமனுக்கு இது எவ்வாறு பொருந்தம்? அப்படி இருக்கவும், இராமன் இவ்வாறு பேசினான் என்றால், அதற்கு ஏதேனும் உட்பொருள் இருத்தல் வேண்டும். வணங்கி நின்றவளைப் பாம்பெனச் சீறும் இவ்வள்ளல் இதோ பேசுகிறான்: