பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை (பல்கலை வேந்தர் திரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், M.A., B.L.,M.O.L.) 'பழைமையை எதிர்ப்பதே புதுமை’ என்ற கொள்கை சிலரை மருட்டுகின்றது. இராமனது சிறுமையையும் இராவணனது பெருமையையும் பரக்கப் பேசுகின்ற பேச்சுப் புதுக்காலப் பேச்செனக் கருதிப் பலர் ஆரவாரம் செய்கின்றனர்; நூல்கள் எழுது கின்றனர்; பாட்டுபாடுகின்றனர்; இவை அனைத்தும் கம்பன் காட்டிய இராவணனது பெருமையின் அடித்துரசினையும் விளக்கவில்லை எனலாம். ஆதலின், கம்பன் பெற்ற அருமந்த பிள்ளையாம் இராவணனை, வரலாற்று வழியாலன்றிக் கவிநயத்தின் வழியே ஆராய்வது பழைமையும் புதுமையும் கலந்ததோர் இனிமையாம். பழம் நழுவிப் பாலில் விழுகிறது! பாட்டின் திறனாய்ந்து தெளிதல் எல்லாம், ஒருவகையால் ஒப்பிட்டுப் பார்த்துச் சுவைத்தலேயாம். முன் எல்லாம் வட நூற்பாக்களோடு ஒப்பிட்டுச் சுவைத்து, இந்திய ஒருமை நுகர்ச்சியில் திளைத்தோம். இன்றோ, மேனாட்டு நூல்களோடு ஒப்பிட்டுச் சுவைத்து, உலக ஒருமை நுகர்ச்சியில் திளைத்தல் வேண்டும். இயற்கை அன்னை இந்த முதிர்ச்சி நிலையைக் காணவே, நம்மை இதுவரையிலும் மேனாட்டுக் கலை வாழ்க்கையில் பழக்கிவந்தாள்.