பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v கம்பர் இந் நாளில் விடுதலை அடைந்தது கண்டு மகிழ் வெய்துகிறேன்! அவ் விடுதலை நல்கிய தோழர் சரவண. ஞானசம்பந்தர்க்கு எனது வாழ்த்து உரியதாகுக. தோழர் ஞானசம்பந்தர் தொன்மைத் தமிழ்க் குடியில் தோன்றியவர்; புலவர் வழி வந்த புலவர்; ஆசிரியர் வழி வந்த ஆசிரியர்; விஞ்ஞானியர். அவர் தமது கல்வி கேள்வி ஆராய்ச்சிகளால் பெற்ற காலக் கண்கொண்டு கம்பரை நோக்கினர். பழைய கம்பர் அகமுக மலர்ச்சியுடன் காட்சி யளித்தனர். அக்காட்சியே இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்னும் இந்நூல். கம்பர் ஈன்ற தமிழ் இராமனும் இராவணனும் கற்பனை வீரர் என்பதை இந் நூல் விளக்குகிறது. இவ் விளக்கம் நூலின் திறத்தைப் புலப்படுத்தும். கற்பனை வீரம் நாளடைவில் தெய்வத்தன்மை எய்துதல் இயல்பு. இஃது இக்கால உளநூலால் வலுயுறுத்தப் பெறுவது. 'இன்றைய கற்பனை, நாளைய பொருண்மை என்பது கருதற்பாலது. தோழர் ஞானசம்பந்தர் தமிழ் உலகுக்கு ஒரு நல் வழி காட்டி உள்ளனர் என்று கூறுவது மிகையாகாது. அவர் வாயிலாகக் கம்பரின் பலதிறச் சுவைகள் வெளி வர ஏகம்பர் அருள் செய்வாராக! கம்பர் வளரச் சேக்கிழார் முதலியோர் வாழத் தோழர் ஞானசம்பந்தருக்கு நீண்ட நாளும், நோயற்ற யாக்கையும், வேறு பல பேறுகளும் பெருக! பெருக! திரு.வி. கலியாணசுந்தரன்