பக்கம்:இருட்டு ராஜா.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வல்லிக்கண்ணன்135
 

 அனைந்த பெருமாள் பிள்ளையின் மகள் வளர்மதி செத்துப் போனாள்.

“என்னது? செத்துப் போனாளா? வளர்மதியா? நெசமாவா? எப்படி?”

நம்ப இயலாதவனாய் அவன் கேள்விகளை அடுக்கினான். உண்மை அவன் உள்ளத்தை உலுக்கியது. துயரம் கவ்விப் பற்றிய இதயத்தில் வலி எடுத்தது.

அந்த ஊரில் அது சகஜ நிகழ்ச்சி. அடிக்கடி யாராவது ஒரு நபர் பூச்சி மருந்தை குடித்து வைப்பது வழக்கம் தான். தற்கொலை முயற்சி. வயலில் பயிர்களுக்கு பூச்சி நோயைத் தடுப்பதற்காகத் தெளிக்க வேண்டும் என்று வீட்டில் வாங்கி வைக்கப்படும் மருந்து, குறுக்கு வழியில் சீக்கிரமே எமலோக யாத்திரையை மேற்கொள்ள ஆசைப்படுகிற ஆண் அல்லது பெண்ணுக்கு சுலப டிக்கட் ஆக உதவி புரியும்.

பெண்டாட்டியோடு சண்டை போட்டுக் கொண்ட புருசன் அவளுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்று மருந்தை குடித்து விடுவான். புருசனைப் பிடிக்காத பெண்டாட்டி பழிவாங்கும் எண்ணத்தோடு அதைக் குடிப்பாள். மாமியார் கொடுமையை தாங்க முடியாத மருமகள்—குடும்பப் பிச்சுப்பிடுங்கல்களை சகித்து சகித்து அலுத்துப் போன ஆண்—வேலை கிடைக்காத வாலிபன் இப்படி யார் யாரோ பரலோகத்துக்கு ஒரு பாஸ்போர்ட் ஆக பூச்சி மருந்தைக் கையாண்டார்கள்.

ஒன்றிருவர் செத்துப் போவார்கள். சீக்கிரமே கண்டு பிடிக்கப்பட்டால், உற்றார் உறவினர் டாக்சி பிடித்து, மருந்து சாப்பிட்ட நபரை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஒடுவார்கள். பிரைவேட் டாக்டர்கள் நடத்தும் வசதிகள் நிறைந்த ‘கிளினிக்’குகளுக்குத் தான். இது தான் சமயம் என்று டாக்டர்கள் ஐநூறு, அறுநூறு எனப்