பக்கம்:இருட்டு ராஜா.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22இருட்டு ராஜா
 

 தங்கராசு ஊருக்கு வந்த முதல் நாள் ராத்திரி அடிக்கடி கூப்பாடும் விசில் சத்தமும் கேட்டது. அவனுக்கு நல்ல அலுப்பு. எவனோ குடிகாரப் பயல் போக்கத்துத் திரிகிறான் என்று எண்ணிக் கொண்டான்.

மறுநாள் பகலில், பேசிக் கொண்டிருக்கையில், ‘ராத்திரி எவனோ குடிகாரப் பய வீண் கலாட்டா செஞ்சான் போலிருக்கே’ என்றான் அவன்.

அவன் தாய் ‘முத்துமாலைதான் அந்த வரத்து வாறான். அவனுக்கு அது தினசரி வழக்கமாகிப் போச்சு’, என்று சாதாரணமாகச் சொன்னாள்.

தங்கராசு அதிசயித்தான். தினசரியா? இப்படியா பண்ணுவான், முத்துமாலை? யாரு, நம்ம பூவுலிங்கம் மாமாவோட மகனா? அவனுக்கென்ன கேடு வந்தது இப்படி? என்று கேள்விகளை அடுக்கினான்.

“இந்த ஊரிலே அவனைக் கேட்கிறதுக்கு ஆளு யாரு இருக்காங்க? நல்லவங்க, பெரியவங்க, ஆக்கினைகள் செய்யக் கூடியவங்க எல்லோரும் போய் சேந்தாச்சு, சில பேரு இந்த ஊரே நமக்கு வேண்டாம்னு டவுனுக்குப் போயிட்டாங்க. முத்துமாலை ராச்சியம் கொடிகட்டிப் பறக்குது!” என்று அம்மா அறிவித்தாள்.

தங்கராசு கேள்விகள் போட்டு மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொண்டான். “சே, பெரிய நியூசன்ஸாப் போச்சே, போலீசுக்குச் சொல்லி, அடக்கிப் போட வழி பண்ணலியா யாரும்?” என்று தவித்தான்.

“நம்ம ஊருக்குப் போலீஸ் ஸ்டேஷன் வரவேயில்லை. பத்து மைலுக்கு அப்பாலே இருக்கு போலீசும், ஸ்டேஷனும், அங்கே போய் சொல்லித்தான் என்ன நடந்திரப் போகுதுன்னு யாரும் அக்கறை எடுத்துக்கிடலே!”