பக்கம்:இருட்டு ராஜா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96இருட்டு ராஜா

 வேகமாகப் போகிற போதே, வந்தவன் கூறிக் கொண்டு நடந்தான் “அரை மணி நேரத்துக்கு முந்தி மேலத்தெரு வழியாக ஒரு காரு போச்சு.டாக்சி ஏதாவது இருக்கும். யாரு வீட்டுக்காவது ஆளுக வரும்னு நினைச்சேன். பத்து நிமிசத்துக்குப் பிறகு நான் வாய்க்கால் பக்கமா வந்தேன். காரு பெரிய கோயில் கிட்டே நின்று கார் லைட்டை போட்டுப் பார்த்திட்டு அணைச்சிட்டாங்க. ரோடிலே வந்த போது கூட லைட்டுக எரியலே. நான் ஒரு மரத்து மறைவிலே நின்று பார்த்தேன். ரெண்டு பேரு மெதுவா உள்ளே போனாங்க, சின்னக் கதவு இருக்குல்ல, அது வழியே...”

“சரி சரி, அவங்க யாருன்னு , தான் பார்த்திடலாமே” என்று முத்துமாலையும் மற்றவர்களும் வெகு வேகமாக நடத்தார்கள்.

இருட்டுக்காலம் தான். ஆயினும் மங்கிய ஒரு வெளிச்சம் நிலவியது.

“எவனாக இருந்தாலும் சரி.ராத்திரி இருட்டுக்குள்ளே திருட்டுத்தனமா கோயிலிலே புகுந்திருப்பவங்க நல்ல எண்ணத்தோடு நுழைஞ்சிருக்க மாட்டாங்க. அதனாலே முதல்லே நாம செய்ய வேண்டியது, கார் சக்கரங்களில் காற்றைத் திறந்து விட்டிரணும். வெளியே வந்த உடனே காரிலே ஏறி ஓடிவிடாதபடி அது தடுக்கும்” என்று முத்துமாலை வழி வகுத்தான்.

கோயில், ஊரை விட்டுச் சிறிது துாரம் தள்ளி ஒரு தோப்பினுள் ஒதுங்கியிருந்தது. கோயில்பக்கம் நடப்பது ஊருக்குள் தெரியாது. அதிலும், இருட்டு. ஊரில் எல்லா வீடுகளிலும் ஏழுமணிக்குள்ளேயே கதவுகள் அடைக்கப்பட்டு விடுவதனால், தெருக்கள் வெறிச்சிட்டே கிடந்தன.

அவர்கள் சீக்கிரமே கோயிலை அடைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/98&oldid=1139560" இலிருந்து மீள்விக்கப்பட்டது