பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

இதயம்

வெற்றியால் ஏற்றம் பெற்றுவிட்டனர் இந்த மக்கள்! மனைகளில் மகிழ்ச்சியும், தொழிலிலே வளர்ச்சியும், வயலிலே செழிப்பும், யாரால் ஏற்படுகிறது என்பதை அறிந்துதான், இன்று வாழ்த்தி வரவேற்கிறார்கள். களத்திலே, நாம் கொட்டிய இரத்தம், இன்று இவர்களுக்கு வாழ்வு தருகிறது; அங்கு செந்நீர் கொட்டினோம்; இதோ களிப்புக் கண்ணீரைச் சிந்துகிறார்கள் ! நன்றி காட்டுகிறார்கள்! நல்ல மக்கள்! நமது மக்கள்! நம் நாட்டவர்! என்று எண்ணிக் களிப்படையும் வெற்றி விருது பெற்ற வீராதி வீரன், படை அணிவகுப்புடன் ஊர்வலம் வந்ததுண்டு! கண்கொள்ளாக் காட்சிகள்! சிந்தைக்குச் செந்தேனாய் அமைந்த இசை நிகழ்ச்சிகளுடன், ஊர்வலங்கள்! கண்களைப் பறிக்கும் அணி மணியுடன் “அலங்காரவல்லிகள்” அன்னமோ, பேசும் சொர்ணமோ, அல்லிக் கூட்டமோ, அழகு மயில் ஆட்டமோ என்று கவி அறியாதாரும் களிப்பால் கவிஞர் நிலை பெற்றுச் கூறிக் குதூகலிக்கும் விதமான காட்சிகளாக அமைந்த ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதுபோன்ற ஊர்வலம் உலகிலே, இதற்கு முன்பும் நடைபெற்றதில்லை; இனி என்றும் நடைபெறாது என்று கூறத்தக்கதாக அமைந்திருந்தது.

மன்னன் ஆள்கிறான்; மக்கள் மாள்கிறார்கள்! அரண்மனை இருக்கிறது; அங்கிருந்து கிளம்பும் அழிவுப்புயல், வயலை அழிக்கிறது. வனிதையரை அழிக்கிறது. தொழிலை நாசமாக்குகிறது; தோழர்களைத் துடிக்க வைக்கிறது! அரசன் தலைக்கு முடி கொடுத்தோம். அவன் நம் குரல் வளையை நெறிக்க ஆட்களை ஏவுகிறான்!— என்று மனம் நொந்து, பேசிப் பேசி, அழுது அழுது, கண்ணீரும் வற்றிப் போன பிறகு, கனல்கக்கி, எதிர்ப்பட்டதெல்லாம் இனிப் பிடி சாம்பலாகும்! என்று எக்காளமிட்டுக் கொண்டுள்ளனர், ஏதுமறியாதவர்கள்! எதற்கும் தலையாட்டக் கூடியவர்கள்!— என்று கருதப்பட்டுவந்த மக்கள்!

அந்த மக்கள், வீறிட்டெழுந்திருக்கும் வேளையிலே. ஊர்வலம்! மன்னன் வருகிறான் ஊர்வலமாக! இராணியுடன், பெற்றெடுத்த செல்வங்களுடன்!