பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பானால்

51

கடும்புயல் வீசுகிறது; காகிதப்பூ என்ன ஆகும்? பிய்த் தெறியப்பட்டு, காற்றோடு காற்றாகி, மண்ணோடு மண்ணாகி உருவம் தெரியாமல் மறைந்து போகும்; அழிந்து போகும்! அதுவன்றோ இயற்கை.

கடும்புயல் வீசிடும் போது, ஆலும் வேலும் அடியற்று வீழுமே! காகிதப்பூ கணப்பொழுதுதான் நிற்க இயலுமோ!

ஆனால், என்னென்பது அதிசயத்தை! கடும் புயலும் அடிக்கிறது, காகிதப்பூவும் இருக்கிறது! அம்மட்டோ! காகிதப் பூவை, உடன் அழைத்து வருகிறது கடும்புயல்! ஆத்திரம் கொண்ட மக்கள், அழைத்து வருகிறார்கள், ஆற்றலிழந்த அரசனை, ஊர்வலமாக!! அவன் கண்டறியாக் காட்சி!

மன்னன் வருகிறான் ஊர்வலமாக! மக்கள் முழக்கமிடுகிறார்கள், வாழ்க! வாழ்க! என்று. ஆனால் யார் வாழ்க என்கிறார்கள்? மக்கள் ‘வாழ்க!’ என்று முழக்கமிடுகிறார்கள்.

தாய்மார்கள், தமது குழந்தைகளுக்குக் காட்டுகிறார்கள், “அதோ, பார்!பார்! அவன்தான் மன்னன்! மிரள மிரள விழிக்கிறானே அவன்தான்! மண்ணில் போட்டெடுத்த பொம்மை போல இருக்கிறானே, அவன்தான்!” என்று கூறிக் கெக்கலி செய்கிறார்கள்.

“என்ன கனிவு! எவ்வளவு குழைவு! கண்ணைப்பார் கண்ணை!” என்று கோபத்தைக் கேலியில் குழைத்து, வழித்தெடுத்து வீசுகின்றனர்; கூடை சுமந்து கூலி பெற்றுக் கும்பி நிரப்பும் பெண்டிர் கூட்டம், இராணியைப் பார்த்து, “இராணியாம், இராணி! அவளுக்கு என்ன அப்படி ஒரு பட்டம். அரசன் மனைவி என்று சொல், அதுபோதும் - அந்த அழிவு தேடிய ஆணவக்காரிக்கு” என்று பேசுகின்றனர் சிலர்.

“”எதற்கெடுத்தாலும் கோபம்தானா? எப்போதும் சச்சரவு செய்தபடி இருக்கத்தான் வேண்டுமா? கஷ்டப்படுகிறோம், உண்மைதான்! கண்ணீர் பொழிகிறோம்; கர்த்தன் அறிவார். அவருடைய அருட்கண் திறந்தால், எல்லாத் தொல்லையும் தொலைந்து போகும். அதை விட்டு விட்டு