பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பன்னிரண்டு காட்டு வாத்துகள்
 

சுற்றிக் காவலுக்காக ஆள்களையும் நிறுத்தி வைத்திருந்தாள். ஆனால், அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனே, அந்தக் கணத்திலேயே, மற்றைக் குழந்தைகள் இருந்த அறைக்குள்ளே சிறகுகளைத் தட்டும் ஒசையும், பறவைகள் ' கூ,கூ,கூ' என்று கூவும் ஒலியும் கேட்டன. சிறிது நேரத்திலே பன்னிரண்டு இளவரசர்களும் வாத்துகளாக மாறி, திறந்திருந்த சாளரங்களின் வழியாக வெளியே பறந்து சென்றுவிட்டார்கள். அருகிலேயிருந்த வனத்தை நோக்கி அவர்கள் பறந்து சென்றது, பல அம்புகள் ஆகாயத்தில் வேகமாகப் பாய்வன போலிருந்தது. இதை அறிந்த வேந்தன் தன் மைந்தர்களை இழந்ததற்காக மிகவும் வருந்தினான். இதற்கு மூல காரணம் இராணிதான் என்பது தெரிந்திருந்தால் அவன் கோபத்தால் கொதித்திருப்பான்.

புதிதாய்ப் பிறந்திருந்த இளவரசியை எல்லோரும் பணி ரோஜா என்று அழைத்து வந்தனர். பனிக்கட்டி போலவும், ரோஜா இதழ்கள் போலவும், அவள் உடல் வெண்மையும் சிவப்பும் கலந்திருந்ததால் அந்தப் பெயரே அவளுக்குப் பொருத்தமென்று அவர்கள் கருதினர். எல்லோரும் அவளிடத்தில் அன்பும் ஆதரவும் காட்டி வந்தனர். அவளுக்குப் பன்னிரண்டு வயதாயிற்று. கூட விளையாடுவதற்கு ஒரு குழந்தைகூட இல்லாமலிருந்ததால், அவள் தன் தனிமைக்காக வருந்தினாள்; தன் சகோதரர்களைப்பற்றி எண்ணினாள்; அவர்கள் இறந்து போய்விட்டதாகவே அவள் இவ்வளவு காலமும் கருதியிருந்தாள். அதன் உண்மையென்ன என்பதை அன்னையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்துடன், அவள் இராணியிடம் சென்று கேட்டாள். அவளுடைய கேள்விகளை இராணியால் தாங்க முடியவில்லை. அவளும் தன் உள்ளத்தில் இத்தனை ஆண்டுகளாக உறுத்திக்கொண்டிருந்த இரகசியத்தை இளவரசியிடம் சொல்ல வேண்டுமென்று சமயத்தை எதிர்பார்த்திருந்ததால், முந்தைய வரலாற்றை விளக்கமாகச் சொல்லிவிட்டாள். அவ்வளவு தான், இளவரசி உடனே ஒரு முடிவு செய்துகொண்டு, அன்னையிடம் அதை அறிவித்தாள் : "என் பொருட்டாக என் அருமைச் சகோதரர்கள் காட்டு வாத்துகளாக மாறியுள்ளனர். என்னால் அவர்கள் எத்தனையோ இடர்களை அனுபவித்து வருகின்றனர்; இனி ஒருநாளைக் கூட வீணாக்காமல் நான் அவர்களைத் தேடிப் போகிறேன்.