பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பன்னிரண்டு காட்டு வாத்துகள்

67


 முதலிலே முத்தமிட்டு வாழ்த்துவது என்பதே அப்போட்டிக்குக் காரணம்.

மூன்று ஆண்டுகளாக இளவரசி பாசியெடுத்து வந்து, நூல் நூற்று, அந்நூலைச் சட்டைகளாகப் பின்னுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தாள். மூன்று ஆண்டுகளில் அவள் எட்டுச் சட்டைகள் தயாரித்துவிட்டாள். அந்தக் காலம் முழுதும் அவள் ஒருமுறைகூடப் பேசியதில்லை, சிரித்ததில்லை, அழுததுமில்லை. எதை அடக்கிக்கொண்டாலும் அழுகையை அடக்கிக்கொள்வதுதான் அவளுக்கு மிகவும் கடினமாயிருந்தது.

ஒருநாள் அவள் தோட்டத்தில் அமர்ந்து நூல் நூற்றுக்கொண்டிருக்கையில், எங்கிருந்தோ ஒரு வேட்டைநாய் அங்கு ஓடிவந்து, அவளுடைய தோள்களில் கால்களை வைத்துக்கொண்டு, அவள் நெற்றியையும் தலையையும் நாவினால் நக்கிற்று. அடுத்த நிமிடம் எழில்மிகுந்த இளைஞனான ஒர் அரசன், குதிரைமீது அமர்ந்துகொண்டு தோட்டத்தருகில் வந்து, திட்டி வாசல்பக்கம் நின்றுகொண்டு, தன் தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டான். இளவரசி தலையை அசைக்கவும், அவன் உள்ளே நுழைந்தான். அங்கே அவன் வந்ததற்காகப் பன்முறை மன்னிப்புகள் கோரினான், அவளிடம் பல கேள்விகளும் கேட்டான். ஆனால், அவள் பேசாமடந்தையாகவே இருந்துவிட்டாள். அவளைக் கண்டது முதலே அவன் அவளிடம் காதல் கொண்டுவிட்டான். தான் பக்கத்திலிருந்த இராஜ்ஜியத்தின் அரசனென்றும், அவளை மணக்க விரும்புவதாகவும், அவள் தன்னுடன் வந்து தன் இராணியாய் இருக்க வேண்டுமென்றும் அவன் கூறினான். அவளுக்கும் அவனிடம் காதல் நிறைந்திருந்தது. ஆனால், அவளுடைய சகோதரர்களை எப்படி விட்டுச்செல்வதென்று அவள் கலங்கினாள். பல முறை இயலாதென்று காட்டத் தலையை ஆட்டினாள். ஆனால், இறுதியில் அவள் இசைவு காட்டித் தன் அன்புக்கரத்தால் அவன் கரத்தைப் பற்றிக் கொண்டாள். அவளுடைய சகோதரர்களும், அவர்களைக் காத்துவந்த வனதேவதையும் எப்படியும் தான் இருக்கும் இடத்தைக் கண்டுகொள்வார்களென்று அவள் நம்பினாள். அவள் புறப்படுவதற்கு முன்னால் அவள் சேர்த்து வைத்திருந்த பாசியை ஒரு சட்டையிலும், எட்டுச்சட்டை -