பக்கம்:இலக்கண வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

(4) உரைகளாலேயே நாம் இழந்து போன தமிழ்ச் செவ்வங்களின் பெயர்களையோ பகுதிகளையோ குறிப்புகளையோ அறிந்து கொள்ள முடிகிறது.

இவற்றால், உரைகண்ட பெருமக்கள் மூல நூல் அழிந்து படாமல் பெரிதும் காத்துள்ளார்கள் என்பது விளங்கும். மூல நூலில் இருந்த இருண்ட பகுதிகளை யெல்லாம் ஒளிவிளக்கம் செய்து வெளிப்படுத்தியதுடன் நூலுக்கு அழியா வாழ்வு தந்தவர்களும் உரையாசிரியப் பெருமக்கள் என்பது தகும்" (சுவடிக்கலை பக் :6, 7.)

தமிழ் வரலாற்றில் மூல வரலாறு உரை வரலாறு என இரு கூறுகள் உள. பின்னது முன்னதற்கு நிகரானது; தாழ்ந்ததன்று. மூலாசிரியர்கள் ஒப்ப உரையாசிரியர்களையும் போற்றுவது தமிழ் மரபு. மகத்துவம் வாய்ந்த அகத்தியன், ஒல்காப் புலமைத் தொல்காப்பியன், தெய்வப் புலவன் திருவள்ளுவன், பல்கலைக் குரிசில் பவணந்தி என்றாற்போல உளங்கூர் கேள்வி இளம் பூரணர், ஆனாப் பெருமைச் சேனாவரையர், உச்சிமேற் புலவர் நச்சினார்க்கினியர் எனவரும் சிறப்புப் பெயர்க் கிளவிகளே சான்று. இடைக்காலம் என்பது உரைக் காலம் அன்று; தொன்னூல்களை உரையென்னும் கயிற்றால் பிணித்த உயிர்க்காலம்” என்கிறது தொல்காப்பியக் கடல் (பக். 21).

தொல்காப்பிய நிலைபேற்றுக்கு உரை முறைகள் பெருங் காரணமாக இருத்தலையும் சுட்டுகிறது தொல்காப்பியக்கடல். (பக். 23) அவை:

1. 'நூற்பாவிற்கு ஏற்ற உரையெழுதி அமையும் இயல்புரை.
2. உரையாசிரியர்கள் நூலாசிரியனுக்குப் பின் தங்காலம் வரை வந்த வழக்காறுகளை ஏற்ற இடத்தில் தந்து முடிக்கும் இயைபுரை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/109&oldid=1471425" இலிருந்து மீள்விக்கப்பட்டது