பக்கம்:இலக்கண வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

மயிர் நல்ல ஆயின” என்றும், “எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால் யாத்தமையால் பைங்கூழ் நல்ல'” என்றும் கூறுவதும் (சொ. 21, 22) “விலங்கும் மரனும் புள்ளும் உள்ள நோய் உற்றாற்கு மனக்குறைக்கு மறுதலை மாற்றம் கூறுவன போலும் குறிப்பின” எனலும் (சொ. 416) வாளானும் தோளானும் வேறலன்றி, “சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப் போர் பூழ்ப்போர் என்பனறவற்றான் வேறலும் எனப் போர்வகை அடுக்குதலும் (பொ. 74) (அடியர்) “அகத்திணைக்கு உரியரல்லரோ எனின், அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும், இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடையராகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக்கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்குரியராயினார் என்க” என்பதனானும் பிறவற்றாலும் இளம்பூரணர் பல்துறைப் புலமை நன்கறிய வருகின்றது.

“சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் உவக்கும்; தந்தை உவக்கும்” என்பதால் உரையாசிரியர் கையெழுத்தழகை எவ்வளவு விரும்பினார் என்பது விளங்கும் (சொ. 40).

“மனைவியைக் காதலிக்கும்; தாயை உவக்கும்” என்பவற்றால் வாழ்வியல் நுணுக்கத்தை எவ்வளவு தேர்ந்திருந்தார் இளம்பூரணர் என்பது விளங்கும் (சொ. 72).

உரையாசிரியரை அடுத்துத் தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை கண்ட சேனாவரையரைத் தொடர்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/132&oldid=1471303" இலிருந்து மீள்விக்கப்பட்டது