பக்கம்:இலக்கண வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

ரன்ன அமைவுடைய என்பதுணர்த்துதற்கு அவ்வாறோதினார் என்பது” என அமைதி கூறுகின்றார். இன்னவை நூலாசிரியர் ஆணைவழிச் செல்லும் உரைமரபு காட்டுவன என்க.

நூலாசிரியர்க்குரிய நெறிகளுள் ஒன்று ‘உய்த்துணர வைத்தல்’ என்பது. எனினும், சில இடங்களில் உய்த்துணர வேண்டாமல் வெளிப்பட நூல் இயற்றுவதும் வழக்கே. அத்தகைய இடங்கள் சிலவற்றில் சேனாவரையர் நயம்பட உரை வரைகின்றார். ‘வழா அல் ஓம்பல்’ என்று வழுவாமல் காத்த ஆசிரியர் (13),

“செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு
அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே”

என விளக்குகிறார் (16). இந்நூற்பா விளக்கத்தில் சேனாவரையர், “நுண்ணுணர் வுடையார்க் கல்லது அதனால் உணர்தலாகாமையின் விரித்துக் கூறியவாறு” என நூலாசிரியர் பேரியலை வெளிப்படுத்துகிறார். இவ்வாறே, “ஆக்கந் தானே காரண முதற்றே” என்னும் நூற்பா விளக்கத்திலும் (21) நுண்ணுணர் வுடையார்க்குத் தம்மரபினவே (11) என அடங்குவ ஆயினும் ஏனை உணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணரலாகாமையின் விரித்துக் கூறினார்” என்கிறார்.

ஆசிரியர் வெளிப்பட விளக்கும் இடங்களில், வேறொரு வாய்பாட்டானும் சேனாவரையர் கூறுகிறார்:

“இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே”

என்னும் நூற்பாவில், “ஒன்றன தாற்றலான் ஒன்று பெறப்படுதலின் வழக்காறல்ல என்றானும், செய்யுளாறு என்றானும் கூற அமையுமெனின், ‘உய்த்துணர்வது சொல் இல்வழி’ எனமறுக்க” என்கிறார். வேண்டும் சொல் இல்லாக்கால்தான் உய்த்துணர வேண்டும் என்னும் நெறியை இவ்வாறே மேலும் கூறுவார் (43, 133).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/138&oldid=1471497" இலிருந்து மீள்விக்கப்பட்டது