பக்கம்:இலக்கண வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

“வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்”

என்னும் நூற்பா விளக்கத்தில் (198), “ ‘வேற்றுமை கொள்ளாது’ என்னாது காலமொடு தோன்றுமெனின் தொழில் நிலை ஒட்டும். தொழிற்பெயரும் வினைச்சொல்லாவான் செல்லுமாகலானும், ‘காலமொடு தோன்றும்’ என்னாது வேற்றுமை கொள்ளாது எனின் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல்லெனப்படும் ஆகலானும் அவ்விரு திறமும் நீக்குதற்கு ‘வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்’ என்றார். வினைச்சொல்லுள் வெளிப்படக் காலம் விளங்காதனவும் உள. அவையும் ஆராயுங்கால் காலமுடைய என்றற்கு ‘நினையுங் காலை’ என்றார்” என்பது அத்தகையவற்றுள் ஒன்று.

இடையியலில் ‘எல்லே இலக்கம்’ என்றொரு நூற்பா அமைந்திருத்தலைக் காண்கிறார் சேனாவரையர், அஃது உரிச்சொல் ஆதலால் உரியியலில் இடம் பெறவேண்டும் என்று நினைகிறார். ஆயின் நூற்பா இடையியலில் அன்றோ கிடக்கின்றது! அதனை மாற்றியமைத்தல் நூன் முறையாகாது என்று எண்ணியவராய், “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையான் இடைச்சொல் என்று கோடும்” என்கிறார். இதனால் நூலாசிரியர் நுவற்சியைத் தலைமேல் தாங்கிச் செயற்பட வேண்டும் உரையாசிரிய மரபை உணர்த்திவிடுகிறார் அவர். அதற்கு அவரே சான்றாக விளங்குவதைத் தம் எழுத்தாலேயே புரிவிக்கவும் செய்கிறார் (269). முந்நூற்றுத் தொண்ணூற்றொன்பதாம் நூற்பா விளக்கத்திலும் இக்கருத்தைத் தெளிவிக்கிறார்.

இடைச்சொல், உரிச்சொல் முதலியவற்றை இடைச்சொற்கிளவி, உரிச்சொற்கிளவி என ஆள்கிறார் ஆசிரியர். இவற்றுள் கிளவி என்பது மிகை என்று கருதுவார் உளராகலாம் என எண்ணிய சேனாவரையர், “கிளவி என்பது மிகையெனின்; மிகையாயினும் இன்னோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/137&oldid=1471496" இலிருந்து மீள்விக்கப்பட்டது