பக்கம்:இலக்கண வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

“பிறர்தம் உரை நெறிகளிலும் இவர்தம் உரைநெறி சாலச் சிறந்தது. இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்திருப்பரேல் அவ்வுரையே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைபோல் தலைமையெய்தியிருக்கும்” என முனைவர் வ. சுப. மாணிக்கனார் பாராட்டுகிறார் (தொல் காப்பியத்திறன், பக். 23).

செய்யுளியல் இடமாற்றம்:

செய்யுளியல், பொருளதிகாரத்தின் எட்டாம் இயல். இறுதியியல் மரபியல். சிலர் செய்யுளியலை இறுதியியலாகக் கொண்ட முறையும் பேராசிரியர் காலத்தில் இருந்தது என்பதை அவருரையால் அறிய வாய்க்கின்றது.

“இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்கும் செய்யுளுமென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித்தல்லது அவற்றைக் கூறும் இலக்கணம் கூறலாகாமையின் என்பது. இக்கருத் தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஓத்தென்ப” என்கிறார். (மர. 93). இக்குறிப்பால், செய்யுளியல் ஒன்பதாம் இயலாக இருந்ததென்றும், அதனொடு நூல், நூல்வகை, உரை பற்றிய நூற்பாக்கள் அதன் நிறைவில் இருந்தன என்றும் எண்ணுதற்கு இடனுள்ளது. இதனை மேலாய்வு செய்தல் வேண்டத் தக்கதாம்.

முறை வைப்பு:

பேராசிரியர் ஓரியலுக்கும் அடுத்துவரும் இயலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். ஒரு நூற்பாவுக்கும் அடுத்துவரும் நூற்பாவுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டுகிறார். ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் முறை வைப்பையும் உன்னிப்பாக எண்ணி எழுதுகிறார்.

‘மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயைபு என்னையோ எனின்’ என்று மெய்ப்பாட்டியல் முதல் நூற்பாவில் விளக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/153&oldid=1466775" இலிருந்து மீள்விக்கப்பட்டது