பக்கம்:இலக்கண வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

135

நூற்றாண்டின் தொடக்கமும் ஆகிய காலத்தன எனப்படுதலாலும் கல்லாடனார் காலம் நச்சினார்க்கினியர்க்கும் பிற்பட்டது ஆகலானும் இவர் 15 ஆம் நூற்றாண்டினர் ஆகலாம்.

சமயம்

“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” என்னும் நூற்பா விளக்கத்தில் (32) “வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பாசமும் அனாதி என வரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும் பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க” என்பதும், “மந்திரப் பொருள் வயின் ஆஅகுநவும்” என்பதற்கு (439),

“மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்றானும்
எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர்யாறும்
திண்ணமறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே”

என்பதை எடுத்துக்காட்டி இதனுள் மண்ணைச் சுமந்தவன்—ந, வரதராசன் மகன்—ம, வரகாலி மூன்று—சி, இரண்டு மரம்—வா, ஓர்யாறு—ய, எனக்கூற ‘நமச்சிவாய’ எனப் பொருளாயிற்று என்று குறிப்பதும் கொண்டு இவர் வைதிகம் சார்ந்த சைவ சமயத்தர் எனக் கருதலாம்.

உரைநிலை

இவர், ‘கடாவிடை யுள்ளுறுத்து’ முதல் நூற்பாவுக்கு உரை விரிக்கிறார். அதன் நிறைவில் “இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடை யுள்ளுறுத்து உரைப்பிற் பெருகும்” என அமைகிறார். எனினும் இவருரை காண்டிகை யுரையிலும் விரிவுரையாகவே செல்கின்றது.

தமிழ்வழக் காற்றை இவர் ‘தமிழ்நடை’ என்கிறார் (2, 243), காலம் உலகம் என வரும் நூற்பாவில் வரும் (56) “சொல்” என்பதற்கு வேதம் எனப் பொருள் செய்கிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/181&oldid=1471547" இலிருந்து மீள்விக்கப்பட்டது