பக்கம்:இலக்கண வரலாறு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

காரணம் உண்டெனக் கண்டாலும், தம் காட்சிக்கு ஏற்ப இடமாற்றியும், பிரித்தும், இயைத்தும் கொள்ளும் ஒரு நெறியை ஏற்பதாயின் எந்நூலாயினும் நூலாசிரியர் படைப்பாக இராமை ஒரு தலை. இஃது உரை காண்பார் மரபன்று. என்ன புதுமை எனினும் நூலைச் சிதறிக் கோலந் தெளிக்கும் உரிமை உரை காண்பார்க்கு இல்லை. பாடவேறுபாடு என்று சுவடிச் சான்று இன்றித் திருத்துதலும் உரை காண்பார்க்கும் பதிப்பிப் பார்க்கும் உரிமை இல்லை எனின்—அவற்றை மேற்கொள்வது முறைமையன்று எனின்—இவ்வாறு எல்லாச் சிதைவுகளுக்கும் ஒரு மொத்தச் சான்றாக உரை வருத்தல் அடிப்படை நெறித்தவறாம். அன்றியும் தாமே அடியியைத்துக் காட்டலும் இடம் பெறின் நூல் நூலாமா?

திறனாய்வாளர் எனின் நூற்பாவில் கைவையாமல் இவ்விவ் விடத்து இவ் விந்நூற்பாக்கள் இருத்தல் வேண்டும் எனல் சாலும். உள்ள அமைப்பை மாற்றாமல் எத்தகைய பிரிப்பு, கூட்டு, இயைப்பு கொண்டும் உரை வகுக்கலாம். மாட்டு என்பதைக் கொண்டு உரையில் கைவைத்த நச்சினார்க்கினியரும் பாட்டில் கைவைத்தாரல்லர். இவற்றை எண்ணல் வேண்டும்.

தெய்வச் சிலையார் உரையுள் இத்தகைய தொரு மாற்று முறை செய்யப்பட்டுள்ளது. அதனை அவரைப் பற்றிய பகுதியுள் காண்க. 'எல்' என்பது இடையியலில் இருக்கக் கண்டும், அஃது உரியியலில் இருக்க வேண்டும் எனத் தாம் கொண்டும் இடமாற்றுச் செய்யாத சேனாவரையர் நூல் வரம்பை அவர் பகுதியில் காண்க.

ஆசிரியர் குழந்தையின் புத்துரையில் உள்ள நூல் வைப்பு முறை ஏற்கத்தக்கதா? ஏற்பின் நூல்களின் நிலைமை என்னாம்?

“இவ் வைப்புமுறை வன்கண்மையது என்பது மட்டுமன்று. தொல்காப்பிய நூற்பா அமைப்புத் தொடர்ச்சிக்குக் கீழறையுமாம்.” என்று கூறும் தேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/205&oldid=1471612" இலிருந்து மீள்விக்கப்பட்டது