பக்கம்:இலக்கண வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179

மூன்றாம் நாள் நிற்கும் கருகுறு வாழ்க்கைத்தாம்; வாழினும் திருவின்றாம்; அதனாற் கூடப்படாது" என்று இவர் கூறும் உரை (43) இவர்தம் உடற்கூற்றியல் அறிவைத் தெளிவிக்கவல்லது. இவ்வாறே பிறபிற துறையறிவுகளும் உரைக்கண் அறிய வருகின்றன.

சாதவாகனம், இளந்திரையம், நூல், கலைக்கோட்டுத் தண்டு, கூத்த நூல், பெருங்குறிஞ்சி (குறிஞ்சிப் பாட்டு) முதலிய சிறப்புப் பெயர்களை உரிய இடங்களில் நினைவுறுத்துகிறார். தேவரும் அசுரரும் பொருத காலத்துத் தேவரையும் அசுரரையும் ‘ஒருவீர் ஒருவீர் மிக்காரை ஒறுப்பல் யான்’' எனப் பாண்டியன் மாகீர்த்தி சந்து செய்வித்தானென ஒரு புதுமைச் செய்தியைப் புகல்கிறார் (35), செம்பூட்சேயார் கூற்றியல் என ஒரு நூலை இவர் குறிப்பதும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பொருட்பால் என்பதும் (36) புதுமையானவையே.

மறுப்பு

பிறர் நூற்பாக்கள் சிலவற்றை இவர் எடுத்துக் காட்டுகிறார். அவை மறைந்து போன நூல்களைச் சேர்ந்தவை போலும் (19, 20, 21, 43). பிறர் உரையை எடுத்துரைத்து ‘அவரறியார்’ என்றும் (30), ‘பொருந்து மாற்றின் அறிந்து கொள்க’ (23) என்றும், ‘நல்லது அறிந்து கொள்க’ என்றும் (43) இவர் குறிக்கிறார். ‘இச்சூத்திரம் தவளைப் பாய்ச்சல்’ என்பது போலக் குறிப்பதையும் (42), இச்சூத்திரம் பருந்தின் வீழ்க்காடாகக் கிடந்ததென்று கூறுவாரை, ‘அது பொருத்தமன்று’ (49), என்பதுபோல மறுத்துரைப்பதையும் மேற்கொன்கிறார்.

இறுதி நூற்பாவில் வரும் 'ஈண்டையோர்' என்பதற்கு இரட்டுற மொழிதலான் ஈண்டையோர் என்பதை ஒரு பெயராகக் கொள்ளாது, ‘ஈண்டை ஓர்’ எனக் கொண்டு ‘தானே அவளே தமியா’ என்றதனால், தானே அவள், அவளேதான் என இயன்ற ஈருடலின் ஓர் உயிர் போல்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/224&oldid=1472520" இலிருந்து மீள்விக்கப்பட்டது