பக்கம்:இலக்கண வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185

“அவிநயனார் தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்ற இவ்வைந்தினையும்,

அகவல் வண்ணம், ஒழுகிசை வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்ற இந்நான்கினையும்,

குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம் இடையெழுத்து வண்ணம் என்ற இவ்வைந்தினையும் கூட்டி உறழ நூறுவண்ணம் பிறக்கும்” என்றார் என்பது யாப்பருங்கலம் (95).

“ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி நடப்ப தின்னிசை வெண்பா”

(யா. வி. 61)

“தொடைமிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா”

(யா. வி. 62)


என்பன இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இலக்கணம். இவை யாப்பருங்கலம் தருவன.

அகவை

“பாலன் யாண்டே ஏழென மொழிப”
“மீளி யாண்டே பத்தியை காறும்”
“மறவோன் யாண்டே பதினான் காகும்”
“திறலோன் யாண்டே பதினைந் தாகும்”
“பதினா றெல்லை காளைக் கியாண்டே”
“அத்திற மிறந்த முப்பதின் காறும்
விடலைக் காகும் மிகினே முதுமகன்”

“நீடிய நாற்பத் தெட்டி னளவும் ஆடவர்க் குலாப்புறம் உரித்தென மொழிப” இன்னவை பன்னிரு பாட்டியல் வழி அறியவரும் நூற்பாக்கள். இவை பருவங்களின் அகவை, உலாப்புறங் கொள்வார் அகவை, எல்லை என்பன பற்றியவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/230&oldid=1472526" இலிருந்து மீள்விக்கப்பட்டது