பக்கம்:இலக்கண வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

அ. வெண்பாமாலை உரை

உரையாசிரியர்

வெண்பாமாலையின் உரையாசிரியர் சாமுண்டி தேவநாயகர் என்பவர். இவர், ‘சயங்கொண்ட சோழ மண்டலத்து மேற்கானாட்டு மாகறலூர் கிழார்’ எனப்படுதலால் (செந்தமிழ் 1 : 45 - 6) நாடும் ஊரும் அறியப்படுகின்றன. பின்னாளிலும் இம் மாகறலூரில் கார்த்திகேய முதலியார் என்பார் இருந்து மொழிநூல் முதலியன செய்தமை அறியத்தக்கது. இவர் ‘கிழார்’ எனப்படுதலால் உழவர் குடியினர் என்பது விளங்கும். இவர் காலம் கி. பி. 13 அல்லது 14ஆம் நூற்றாண்டு என்பர். அற்றை எருமையூராகிய இற்றை மைசூரில் சாமுண்டி ஈசுவரி கோயிலுண்மை இவர் பெயரை நினைவூட்டுகின்றது.

உரை

இவருரை பொழிப்புரையாய் அமைந்தது; பாடல் சொற்கிடந்தவாறே உரை செல்வது. பாயிரத்திற்கு உரையெழுதிய இவர் பாயிரம் உரைத்த வெல்லாம் உரைத்துக் கொள்க என்று விடுத்துச் செல்வதால் இவர்தம் சுருக்கவுரை நோக்குப் புலப்படும். எனினும் மிக அரிதாக வேண்டுமிடத்து விரித்தும் எழுதுகிறார்:

“இடரெட்டாவன:

“விட்டில் கிளிநால்வாய் வேற்றரசு தன்னரசு
நட்டம் பெரும் பெயற்கால் எட்டு” (205)

“ஆறு ஏழாவன:

“நாடிய நட்புப் பகைசெலவு நல்லிருக்கை
கூடினரைப் பிரித்தல் கூட்டலா—றீடிலா
வேட்டங் கடுஞ்சொல் மிகுதண்டம் சூதுபொருள்
ஈட்டங்காள் காமமிவை ஏழு”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/253&oldid=1473285" இலிருந்து மீள்விக்கப்பட்டது