பக்கம்:இலக்கண வரலாறு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285

தொல்காப்பியத்தின் வழிவந்தது நன்னூல் என்னும் குறிப்பு சிறப்புப் பாயிரத்தில் இல்லை. ‘முன்னோர் நூலின் வழியே’ என்றுதான் வழிகாட்டப்பட்டுள்ளது. எனினும், தொல்காப்பியர் நூற்பாக்களை நன்னூலார் அப்படியே போற்றி வைத்துள்ளார். 317, 396, 404, 408 ஆம் நூற்பாக்களைக் காண்க. இளம்பூரணர் உரையைக் கொண்டும் இலக்கணத்தை விரித்துள்ளார். இஃதவர்க்குப் பெருந்துணையாக இருந்தமையை ஒப்பிட்டுக் கண்டு கொள்க.

“சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி”

(169)

என்பதில் ‘சாவ’ என்பதற்கு ஏற்ப எழுத்துக்கேட்டைச் ‘சாதல்’ என்றது நூற்பாவைச் சுவையாக்கும் தேர்ச்சியாம்.

“நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை”

(208)

என்பதில் எதுகை நயங்காட்டி இன்புறுத்துகிறார்.

“எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே”

(388)

என்பதில் எதுகையும் மோனையும் இனிது சிறக்கச் செய்கிறார்.

“இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில்
அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே”

என்பதில் இசை கெடுதலால் உண்டாகும் அளபெடையை, “நிரை நிரை, நிரை நிரை” அல்லது “தனதன, தனதன” என இசை கெழும இசைத்து இன்புறுத்துகிறார்.

“னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகும் தநக்கள் ஆயுங் காலே”

(237)

என்பதில் எழுத்துக் குறிகளையும் சொற்குறிகளெனத் தடையற நடையிடச் செய்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/330&oldid=1474256" இலிருந்து மீள்விக்கப்பட்டது