பக்கம்:இலக்கண வரலாறு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

உயிர்களை ஐயறிவுயிரளவில் நிறுத்துவதும் பிறவும் முதனூலார் கருத்து வழிப்பட்டது அன்றாம்.

தொல்காப்பிய மரபியலில் வரும் ஆறறிவுயிர்களின் செய்தியை உரியியலில் கூறுகிறார். பின்னர் ஒரு குணம் தழுவிய உரிச்சொல், பல குணம் தழுவிய உரிச்சொல் என்பவற்றைக் கூறிய அளவில் “இவ்வுரிச் சொற்கள் விரிவுடையன ஆகலின் யாம் சொல்லாம்; பிங்கலம் முதலியவற்றைக் கண்டு கொள்க” என்று அமைகின்றார். இதனை நோக்க, இவ்வியலை முற்றுறச் செய்யவும் முடியா நிலையில் நூலை முற்றுவித்தார் என்று எண்ணுமாறுள்ளது. அவ்வாறாயின் “அரும்பொருள் ஐந்தையும் தருக” என்றமை சீயகங்கன் வேண்டுதலாக நிற்குமே யன்றி, ஐந்திலக்கணமும் கூறினார் என்பதற்குச் சான்றாகாமல் அமையும். இரண்டதிகாரம் உடைமை கருதி நன்னூலுக்குச் சிற்றதிகாரம் என்றொரு பெயருண்மையும் அறியத்தக்கது.

நன்னூலியல்

தொல்காப்பியம் தெளிவும் எளிமையும் அமைத்த விரிந்த நூல். நன்னூல் செறிவும் சுருக்கமும் அமைந்த நூல்.

“எண் பெயர் முறைபிறப்பு” என்னும் எழுத்ததிகார முதல் நூற்பாவில் எழுத்திலக்கணப் பகுப்பை யெல்லாம் மூன்றே அடிகளில் முடித்து விடுகிறார். அவ்வாறு சொல்லதிகாரத்திற்குச் சொன்னார் அல்லர். சொல்லின் இலக்கணமே முதல் நூற்பாவில் சொல்கிறார்.

ஓரெழுத்தால் அமையும் சொற்கள் 42 என்பதை “உயிர்மவில் ஆறும்” என்னும் நூற்பாவில் செறிவுடன் கூறுகிறார் (129). உடம்படுமெய் (162), சொல்லின் விகுதி (140), பண்பின் இயல்பு (136), இடப்பொருள் உருபு (302) முதலியவற்றைச் செறிவுற அமைக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/329&oldid=1474255" இலிருந்து மீள்விக்கப்பட்டது