பக்கம்:இலக்கண வரலாறு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283

“பல்கலைக் குருசில் பவணந்தி என்னும்
புலவர் பெருமான்”

என்று சங்கர நமச்சிவாயரும் (நன். 137 உரை),“பன்னூற் புலவர் பழிச்சும் திறத்ததாம், நன்னூல்” என்று உ. வே. சாமிநாதரும் பாராட்டுவர்.

நூலமைப்பு

நன்னூலின் பாயிரம் 51 நூற்பாக்களும் 4 வெண்பாக்களும் ஆக 55 பாக்களையுடையது. இவை பெரும்பாலும் முன்னையோர் நூலும் உரையும் கொண்டு மேற்கோளாக அமைத்தனவும், அமைத்துக் கொண்டனவுமாம். தொல்காப்பியம், அதன் உரைகள், இறையனார் களவியல் உரை ஆகியவற்றிலும் பிறவற்றிலும் உள்ளவை. தொல்காப்பியத்தின் எழுத்ததிகார ஒன்பது இயல்களை இவர் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என ஐந்தனுள் அடக்குகிறார். சொல்லதிகார ஒன்பது இயல்களை, பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உயிரியல் என ஐந்தனுள் அடக்குகிறார். இவற்றுள் எழுத்ததிகாரத்திலுள்ள பதவியல் ஒரு வகையால் தொல்காப்பியத்தின் வளர்ச்சி நிலை எனலாம். சொற்களைப் பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் எனப் பகுத்துக் காட்டும் இலக்கணமுடையது. அதேபோல் தொல்காப்பியர் காலத்தில் தேவைப்படாததாய் இருந்து, பின்னர் நன்னூலார் காலத்தில் வேண்டியிருந்தனவாகிய வடசொற்கள் தமிழில் புகுங்கால் தமிழியல்புக்கு ஏற்ப எவ்வாறு புகவேண்டும் என்பதை வரம்பு காட்டி (146-150) அமைக்கிறார். ஆயினும் வட எழுத்துப் புகுதலை இவர் ஏற்றார் அல்லர் என்பது கருதத்தக்கது.

தொல்காப்பியர் சார்பு எழுத்துகள் 3 என்றாராக இவர், அதனைப் பத்தாக்கி, அதன் விரியை 369 ஆக்குவதும், பெயரை இடுகுறி காரணம் எனப்பகுப்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/328&oldid=1474254" இலிருந்து மீள்விக்கப்பட்டது