பக்கம்:இலக்கண வரலாறு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

இவற்றை அகக் கைக்கிளை, அகப் பெருந்திணை என்பதுடன் அகப்புறக் கைக்கிளை, அகப்புறப் பெருந்திணை எனவும் விரித்துக் கொண்டு இலக்கணம் கூறுகிறார். அகப்புறங்களின் இலக்கணத்தை ஒழிபியலில் அமைக்கிறார்.

“காமஞ் சாலா இளமையோள்”

எனக் கைக்கிளைத் தலைவியைத் தொல்காப்பியர் குறிக்க (996) இவர், “காமஞ் சான்ற இளமையோள்” என்கிறார் (29). இஃது இவர்க்கு உரித்து என்று கூறாது பொதுவில் அமையவும், இவர்,

“மறையோர் மன்னவர் வணிகர்சூத் திரரெனும்
இறையோர் தத்தமக் கெய்துமற் றதுவே”

என்கிறார் (30). வருணப் பாகுபாடு இறையனார் களவியல் உரையில் தலைப்பட்டு, வளர்ந்த நிலை ஈதென்பதைக் காட்டும். பாட்டியல் நூல்களும் பிறவும் வருணப் பெருக்கை விரித்த சாயல் எண்ணத் தக்கது.

தொல்காப்பியர்,

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

என்று கற்பியல் நிறைவை ஒட்டி உரைக்கிறார். களவு நிறைவு கற்பு என்றும், கற்பு நிறைவு சிறந்தது பயிற்றல் என்றும் சுற்றம் சூழலொடும் அதனைப் புரிதல் என்றும் கூறுகிறார். ஆனால், இவ்வகப் பொருளார்,

“மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து
மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறங் காப்ப”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/363&oldid=1474301" இலிருந்து மீள்விக்கப்பட்டது