பக்கம்:இலக்கண வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxix

ஆசிரியர் வரலாறுகள், புலவர் வரலாறுகள், இலக்கிய அகராதி என்பனவெல்லாம் வெளிவந்துள்ளன.

கால அடைவில் இலக்கிய வரலாறுகள் வெளிவந்துள்ளன; வெளிவந்து கொண்டும் உள்ளன. எனினும் ‘இலக்கண வரலாறு’ என ஒரோ ஒரு நூல் வந்தமையே அறிய வருகின்றது. அது பேரா. சோம இளவரசு அவர்களால் எழுதப்பட்டது. மேலே சுட்டப்பட்ட நூல்கள், இவண் எடுத்துக் கொண்ட இலக்கண நூல்கனின் பல்வேறு பதிப்புகள் ஆகியன இவ்வாய்விற்குப் பயன்பட்டுள்ளன. இவற்றைக் குறைத்து எண்ணினும் முந்நூற்றுக்கு மிகைப்படலால், தனிப்பட்டி தந்திலேன். அச்சில் வாராமல் ஏட்டுச் சுவடி அளவாற் படியெடுத்து வைக்கப்பட்ட-என் கைப்படிகள்-சிலவும், அச்சிட்டும் மறைந்து விட்ட நூல்கள் சிலவும் இவ்வரலாற்றில் இடம் பெற்றுள.

இந் நூலுக்கு மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனார் அணிந்துரை வழங்கியுள்ளனர். ‘தொல்காப்பியக் கடலாய்’, ‘வள்ளுவமாய்’, ‘தமிழ்க் காத’லாய்த் திகழும் அவர்கள் இந்நாளை, மொழிநலம் காக்கும் நயத்தகு நக்கீரக் காவலர்! இலக்கண வரலாற்றுக்கு அவர்கள் அணிந்துரை வாய்த்துள்ளமை, தனிப்பேறென எண்ணி நெஞ்சார்ந்த நேயத்தைப் படைத்து மகிழ்கின்றேன்.

உரையாசிரியர் என்னும் உரைசால் நூலை வழங்கிய நல்லறிஞர் மு. வை. அரவிந்தனார் இந்நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ளனர். அவர்கள், இந்நூலினை முற்றாக அணுகி ஆய்ந்து கூறியுள்ள திறம் வியப்புறுத்துகின்றது. அவர்கள் கூறியவாறு ‘சேர்க்க வேண்டிய செய்திகள்’, ‘மறு ஆய்வுச் செய்திகள்’ ‘ஆசிரியர் நினைவுக்கு’ என்னும் பகுதிகள் என் உள்ளங்கவர்ந்து உவப்புச் செய்வன. அவற்றுள், ஏற்பன மறு பதிப்பில் செய்யப்படும். ‘நிகண்டுகளின் வரலாறு’ இலக்கண வரலாறு போலத் தனி வரலாறு பெறவேண்டிய ஒன்று என்பது என் உட்கோள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/40&oldid=1468574" இலிருந்து மீள்விக்கப்பட்டது