உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கண வரலாறு.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388


என்று காண்பதற்கும் எவ்வளவு ‘துருவுதல்’ வேண்டி நேரிட்டது! கணக்கு — எண் — பிறந்த பெருமை மண் இது என்பது வரலாறு! கணியம் பண்டு தொட்டே வழக்கில் இருந்து வெறியாகவே வளர்ந்து விட்ட மண் இம்மண்! ஆண்டேனும் இந்த மண்ணுக்கு உண்டா? அறுபது ஆண்டுகள் இவர்க்குரியவா? திங்கட் பெயர், நாட் பெயர், நாள்மீன் பெயர்கள் என்னவாயின? அறிவியல் — பொறியியல் — வானியல் என்பனவெல்லாம் எப்படிச் சிதைந்தன? இந்த நிலையால் முந்தியவர் பிந்தியவராய் - பிந்தியவர் முந்தியவராய் வரலாற்றில் இரங்கத் தக்க நிலைக்கு ஆட்படுத்தத் தாமே சான்றாகியமை வருங்காலத்தேனும் மாறுமா? இவ்வரலாற்றொடு தொடர்பற்ற வினாக்கள் அல்ல எனினும், இவற்றைக் கடைப்பிடியாகக் கொள்ளாத ‘வறுமை’யை வரலாற்றுக் கருத்தும் கண்ணோட்டமும் உடையவர் நினைவு கூராமல் இயலாதே!

நூலளவு


தொன்னூலைப் பார்க்கலாம். தொன்னூல் ஐந்திலக்கணம் கூறும் நூல். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என்பன அவை. எழுத்து முதலியவை முறையே 40, 102, 58, 100, 70 ஆக 370 நூற்பாக்களைக் கொண்டது. முதற்கண் சிறப்புப் பாயிரமும், நிறைவில் ஓராசிரியம், ஒருவெண்பா, ஒரு கலித்துறை ஆகியவையும் உள்ளன.


தொன்னூலுக்குத் ‘தெருட்குரு’ என்றொரு பெயரை அந்நாள் அறிஞர் சூட்டினர் என்பதைக் கலித்துறை கூறுகின்றது.

“மருட்களை நூக்கிப் பொருட்பயன் சூட்டி வழுத்துதலால்
தெருட்குரு நாமம்தொன் னூல்விளக் கிற்குச் சிறந்ததுவே”

என்பது அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/433&oldid=1474489" இலிருந்து மீள்விக்கப்பட்டது