பக்கம்:இலக்கண வரலாறு.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36. உவமான சங்கிரகம்


ஆசிரியர்

திருவில்லிபுத்தூர் திருவேங்கடஐயர் என்பார் செய்தது உவமான சங்கிரகம் என்றொருநூல். காப்பு ஒரு பாடலும் நூல் 15 பாடலுமாகப் பதினாறு பாடல்களைக் கொண்டது.

சமயம்

அனைத்தும் வெண்பாவே. இஃது அந்தாதித் தொடையால் இயல்கின்றது. இவர் மாலிய சமயத்தவர் என்பது ‘வேதத் தமிழ் மாறனை’த் தொடக்கமாகக் கொண்டதுடன், ‘குருகூ ரனைத் தொழுது’ வெண்பாவை முடித்தலால் புலப்படும்.

நூல்

மகளிர் முடிதொடங்கி அடிகாறும் உவமைப் பண்புகளைக் கூறுகிறது. இன்னதற்கு இன்னது உவமையாம் என்கிறது. இந்நூல் வழியது இது என்று கூறாமல் ‘மூதுரை’ யாற் சொல்வதாகக் கூறுகிறார். இவண் மூதுரை என்பது முன்னோர் உரை.

கூந்தல், நெற்றி, புருவம், கண், முகம், காது, கபோலம், மூக்கு, இதழ், வாய், பல், எழுத்து, மொழி, தோள், முன்கை, அங்கை, கைவிரல், கைந்நகம், கொங்கை, கொங்கைக்கண், உதரம், உந்தி, மடிப்பு, உரோமக்கொடி, இடை, அல்குல், குறி, தொடை, முழங்கால், கணைக்கால், பரடு, குதி, புறவடி, கால்விரல், கால்நகம், கால், நடை, சாயல், மேனி, தேமல் என்னும் 40 உறுப்புகளுக்கும் உவமை காட்டுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/445&oldid=1474712" இலிருந்து மீள்விக்கப்பட்டது