பக்கம்:இலக்கண வரலாறு.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44. மாணவர் தமிழ் இலக்கணம்


திருமலைவேற் கவிராயர் மைந்தர் சங்குப் புலவர் என்பார் கல்விகற்கும் பள்ளி மாணவர்க்கென ‘மாணவர் தமிழ் இலக்கணம்’ என்னும் பெயரிய நூலொன்றியற்றினார். அது 1962 இல் வெளிவந்தது. ஆசிரியர் காலம் 1893-1968 பண்டித வித்துவான் பட்டம் பெற்றவர். பன்னூலாசிரியர்.

நூல்

மாணவர் தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்பில் உள்ளது. மொத்த நூற்பாக்கள் 313.


எழுத்ததிகாரம் எழுத்தியல், நிலையியல், பிறப்பியல் என்னும் மூன்றியல்களையும் சொல்லதிகாரம் பெயரியல், வேற்றுமையியல், வினையியல், உறுப்பியல், இடையியல், பொதுவியல், புணரியல் என்னும் ஏழியல்களையும், பொருளதிகாரம் அகவியல், புறவியல் செய்யுளியல், அணியியல் என்னும் நான்கியல்களையும் உடையது.


‘இளமை மாணவர் இலக்கணம் இயம்ப’

என்பது ஆசிரியர் நூலியற்றிய நோக்கைப் புலப்படுத்தும். நூன்முகப்பில் பிள்ளையார், கலைமகள் முருகன் வணக்கங்கள் உள்ளன. எல்லாமும் நூற்பாவால் இயன்றனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/477&oldid=1474776" இலிருந்து மீள்விக்கப்பட்டது